தினத்தந்தி 24.10.2013
வீட்டில் வளர்க்கப்படும் பன்றிகளை பிடிக்க நகராட்சிக்கு இடைக்கால தடை ஐகோர்ட்டு உத்தரவு

வீட்டில் வளர்க்கப்படும் பன்றிகளை பிடித்து செல்ல மதுராந்தகம் நகராட்சிக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்துள்ள சூரக்குட்டை கிராமத்தை
சேர்ந்த சுப்பிரமணியின் மகன் எஸ்.கங்கா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்
செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
பன்றி வளர்ப்பு
காட்டுநாயக்கன் சமுதாய வழக்கப்படி, ஒரு குடும்பத்தினர் குறைந்தது 2
பன்றிகளாவது வளர்க்கவேண்டும். இதன்படி, எங்கள் சமுதாயத்தை சேர்ந்த 200
குடும்பத்தினர், எங்கள் கிராமத்தில் பன்றிகளை வளர்த்து வருகிறோம். இந்த
நிலையில், மதுராந்தகம் நகராட்சி 22–6–2012 அன்று ஒரு தீர்மானம்
இயற்றியுள்ளது.
அதில், “பன்றிகளை வளர்க்க நகராட்சியிடம் உரிமம் பெறவேண்டும். உரிமம்
பெறாத பன்றிகளை பிடித்து, பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும்’’ என்று
கூறியிருந்தது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில், உரிமம் இல்லா பன்றிகளை
பிடித்து, பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய ஒப்பந்ததாரர்களையும் நகராட்சி
நியமித்துள்ளது.
சட்டத்தில் இடமில்லை
இந்த ஒப்பந்ததாரர்கள், வீட்டு வளாகத்துக்குள் வளர்க்கப்படும் பன்றிகளை
எல்லாம் பிடித்து சென்று ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு விற்பனை
செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை. சாலைகளில் சுற்றித்திரியும் பன்றிகளை
பிடித்து செல்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், வீட்டில் சுகாதாரமாக வளர்க்கப்படும் பன்றிகளை பிடித்து செல்வது
சட்டவிரோதமானது. எனவே வீட்டில் வளர்க்கப்படும் பன்றிகளை பிடித்து செல்ல தடை
விதிக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இடைக்கால தடை
இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் எஸ்.துரைசாமி, வக்கீல்
வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தார்கள்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “வீட்டில் வளர்க்கப்படும்
பன்றிகளை பிடித்து செல்ல மதுராந்தகம் நகராட்சிக்கு இடைக்கால தடை
விதிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.