தினகரன் 29.07.2010
வேலூர் மாநகராட்சியில் திறப்பு விழாவுடன் முடிந்தது தமிழ் பெயர் பலகை திட்டம்
வேலூர், ஜூலை 29: வேலூர் மாநகராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற அறிவிப்பு அக்கறை இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த மாதம் நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் கொட்டை எழுத்துகளில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து வேலூர் மாநகராட்சியில் தமிழில் பெயர் பலகை வைக்கும் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் நடந்தது. தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி கடந்த மாதம் 21ம் தேதி தமிழில் பெயர் பலகை திறந்து வைக்கும் நிகழ்ச்சி மாநகராட்சி சார்பில் நடந்தது. இதில் கலந்து கொண்ட கலெக்டர் ராஜேந்திரன், முன்னணி கடைகளின் தமிழ் பெயர் பலகைகளை திறந்துவைத்தார்.
வேலூர் மாநகராட்சி முழுவதும் உள்ள கடைகளில் இதுபோன்ற தமிழில் பெயர் பலகைகளை தமிழ் செம்மொழி மாநாடு நிறைவடைவதற்குள் வைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் தமிழ் பெயர் பலகை வைக்கும் திட்டம் ஒரு மாதம் ஆகியும் அப்படியே கிடப்பில் உள்ளது.
‘தூய தமிழில் பெயர் பலகை வைக்க சிலர் யோசிக்கின்றனர். தொழிலாளர் நலத்துறை மற்றும் வணிக வரித்துறையினர் நினைத்தால் தூய தமிழ் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கமுடியும்’ என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
‘கடந்த 1971ம் ஆண்டு சட்டத்தின்படி வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இடம் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி இல்லாத கடைகள் மீது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்து அபராதம் விதிக்க வேண்டும். அதே நேரம் கடைக்காரர்களும் தமிழ் உணர்வுடன் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். இதில் கட்டாயப்படுத்தினால் மனக்கசப்புகள் ஏற்படுகிறது’ என்று வணிகர் பேரவையின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஞானவேலு கூறினார்.