தினமணி 27.06.2013
தினமணி 27.06.2013
அங்கீகரிக்கப்படாத காலனி லே அவுட்: தெற்கு தில்லி மாநகராட்சியும் ஒப்புதல்
அங்கீகரிக்கப்படாத காலனி லேஅவுட்களுக்கு தெற்கு தில்லி மாநகராட்சியும் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் அங்கீகாரம் பெறாத 895 காலனிகளை ஒழுங்குபடுத்தும்
நடவடிக்கைகள் சில ஆண்டுகளாக நடைபெற்று, கடந்த ஆண்டு செப்டம்பரில்
முடிவுற்றன. தில்லி அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
895 காலனிகளில் 312 காலனிகள் தனியார் இடத்தில் இருந்ததால், அவற்றின் லேஅவுட்களுக்கு மாநகராட்சிகள் ஒப்புதல் அளிக்க வேண்டியிருந்தது.
காலனிகளை ஒழுங்குபடுத்தும் பிரச்னையில் தில்லி காங்கிரஸ் அரசுக்கும்,
மாநகராட்சிகளை நிர்வகிக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
தில்லி அரசு மீது மாநகராட்சிகளும், மாநகராட்சிகள் மீது அரசும் குறை
கூறி வந்தன. ஆனாலும் வடக்கு, கிழக்கு தில்லி மாநகராட்சிகளின் எல்லைப்
பகுதிகளில் தனியார் இடத்தில் இருந்த காலனிகளின் லேஅவுட்களுக்கு அந்தந்த
மாநகராட்சிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தன.
இந்த நிலையில் ரஜூரி கார்டன் விரிவு, மீதாபூர் காலனிகளின்
லேஅவுட்களுக்கு தெற்கு தில்லி மாநகராட்சி செவ்வாய்க்கிழமை ஒப்புதல்
வழங்கியுள்ளது.
இருப்பினும் இரு காலனிகளும் லேஅவுட் தயாரிப்புக் கட்டணத்தை மாநகராட்சிகளுக்குச் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“இந்த இரண்டு காலனிகளின் லேஅவுட்கள் பரிசீலிக்கப்பட்டன. உள்புறச்
சாலைகள் 6 மீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்று தீ அணைப்புத்
துறை கட்டாயப்படுத்தியுள்ளது. அதைச் செயல்படுத்த வேண்டும் என்று காலனி
நிர்வாகங்களுக்குக் தெரிவித்துள்ளோம்’ என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.