தினமணி 01.08.2013
தினமணி 01.08.2013
அங்கீகரிக்கப்படாத காலனிகளில் விரைவில் துப்புரவுப் பணிகள்: தெற்கு தில்லி மேயர் உறுதி
அங்கீகரிக்கப்படாத காலனிகளில் விரைவில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெற்கு தில்லி மேயர் சரிதா செளத்ரி தெரிவித்தார்.
தெற்கு தில்லி குசும்பூர் வார்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் மாநகராட்சிப்
பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தெற்கு தில்லி மாநகராட்சியின் கிராமப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்க சுற்றுப்புறத்தை
சுகாதாரமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்காக தெற்கு தில்லி
முழுவதும் உள்ள வார்டுகளில் சுகாதார மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத காலனிகளில் துப்பரவுப் பணிகள் செம்மையாக மேற்கொள்ள
வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குசும்பூர் பகுதியில் போதுமான தெரு விளக்குகள் இல்லை. தெருக்களில்
குப்பைகள் கொட்டப்பட்டு இருப்பது உள்ளிட்டவை ஆய்வின் போது தெரிய வந்தது.
அங்கு போதுமான தெரு விளக்குகள் அமைக்கவும், குப்பைகளை அகற்றி
தெருக்களைத் தூய்மையாக வைத்திருக்கவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. வசந்த் விஹார் மாநகராட்சிப் பள்ளியில் மாணவர்களுக்கு
வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்தேன்.
மதிய உணவின் தரத்தை கண்காணிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் சரிதா செளத்ரி.