அடையாறு ஆற்றில் கொசு ஒழிப்புப் பணிகள்
சென்னையில் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்தும் விதமாக அடையாறு ஆற்றில் கொசு ஒழிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.
அடையாறு ஆற்றில் தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள பகுதிகளில் இந்தப் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன.
இது குறித்து சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னையில் கொசுக்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மனிதர்களுக்கு தொல்லை கொடுக்கும் “கியூலஸ்’ கொசுக்கள் தேங்கும் நீர், நீர்வழிப்பாதைகள் ஆகியவற்றில் உற்பத்தியாவதால் அவற்றை அழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுப்பணித்துறையுடன் இணைந்து அடையாறு ஆற்றில் உள்ள மணல் திட்டுகள், ஆகாயத் தாமரைகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபடுகிறது. மணல் மேடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன. மேலும் கொசு மருந்துகளைக் கட்டுமரங்களில் சென்று ஊழியர்கள் தெளிக்கின்றனர்.
இந்தப் பணிக்காக 50 பெரிய புகைபரப்பும் இயந்திரங்கள், 451 கைத் தெளிப்பான்கள், 242 சிறிய புகைபரப்பும் இயந்திரங்கள், 6 கட்டுமரங்கள் ஆகியவை தினமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.