அடையாறு ஆற்றில் மணல் திட்டுகளை அகற்ற எதிர்ப்பு
அடையாறு ஆற்றில் சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வந்த தூர் வாரும் பணிகள் பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கொசுக்களை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சியும் பொதுப்பணித் துறையும் இணைந்து அடையாறு ஆற்றில் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக இருக்கும் மணல் மேடுகளையும் நீரில் படர்ந்திருக்கும் ஆகாயத் தாமரை செடிகளையும் அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த மணல் மேடுகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியும், கட்டுமரங்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணியும் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள மணல் மேடுகளை அகற்ற ஊழியர்கள் புதன்கிழமை முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இது கடற்கரை ஒழுங்குமறை மண்டலத்தில் வருவதால் மணல் மேடுகளை அகற்ற அந்தப் பகுதி மீனவர்களும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பின் காரணமாக மணல் மேடுகளை அகற்றும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.