தினகரன் 28.07.2010
அண்ணாசாலையில் விதி மீறி கட்டிய வணிகவளாகத்துக்கு சீல்
சென்னை, ஜூலை 28: அண்ணாசாலையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 4 மாடி கட்டிடத்திற்கு சிஎம்டிஏ அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை கண்டறிந்து அவற்றுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தேனாம்பேட்டை, அண்ணாசாலையில் உள்ள 4 மாடி கட்டிடம் ஒன்றுக்கு சிஎம்டிஏ அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்
இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரி கூறுகையில், ‘அண்ணாசாலையில் எண்.409ல் (பழைய எண்.286) தரைதளம் மற்றும் முதல் தளம் ஒரு பகுதியும், இரண்டாம் தளம் ஒரு பகுதியும் கட்டவும், இதில் தரைதளம் குடிசைத் தொழிலுக்கும், மற்ற இரண்டு தளங்களும் குடியிருப்புக்கும் பயன்படுத்தப்படும் என்று மாநகராட்சியில் அனுமதி பெறப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதன்படி தரைத்தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டு பணிகள் முடியும் நிலையில் உள்ளது.
இந்த கட்டிடம் வணிக பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு உபகரணங்கள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. சிஎம்டிஏவின் விதிமுறைகளை இந்த கட்டிட உரிமையாளர் பின்பற்றவில்லை. எனவே இந்த கட்டிடம் சீல் வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.