தினமலர் 02.02.2010
அண்ணாசாலை முதல் காமராஜர் சாலை வரை அழகிய பூங்கா
சென்னை: “”அண்ணாசாலை முதல் காமராஜர் சாலை வரை, கூவம் ஆற்றையொட்டி அழகிய பூங்கா அமைக்கப்படும்,” என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். துணை முதல்வர், நேற்று காலை சிவானந்தா சாலையில் உள்ள பகுதிகளை ஆய்வு செய்து, பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 1,100 மீட்டர் நீளம், ஐந்து மீட்டர் அகலம் உள்ள இடத்தை, பூங்கா அமைப்பதற்காக மாநகராட்சியிடம் ஒப்படைத்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: அடையாறு பக்கிங்காம் கால்வாய், கூவம் போன்ற நீர்வழித் தடங்களை சீரமைக்க எனது தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூவம் ஆற்றை சீரமைக்க ஒருமித்த சுற்றறிக்கை அளிக்கவும், திட்ட செயலாக்கத்தின்படி, தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் பெறவும், “சிங்கப்பூர் கோ ஆப்ரேஷன் என்டர்பிரைசஸ்‘ நிறுவனத்துடன், அடுத்த மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளோம். கூவம் ஆற்றை சீரமைக்கும் பணிகளின் குழு, சிந்தாதிரிப் பேட்டை, புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில், கூவம் கரையை ஆக்கிரமித்து இருந்த ஆட்டோ மற்றும் மோட்டார் உதிரி பாகங்களின் சிறிய தொழிற்சாலைகளை மறைமலை நகருக்கு மாற்ற முடிவெடுத்து, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
புதுப்பேட்டை லாங்ஸ் காலனி பகுதியில் இருந்த 1,150 ஆக்கிரமிப்புகள், கடந்த அக்டோபர் மாதம் அகற்றப்பட்டு மாற்றும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க, ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில், அந்த இடத்தில் அழகிய பூங்கா அமைக் கும் பணி நடந்து வருகிறது. சிவானந்தா சாலையில் அண்ணாசாலை முதல் காமராஜர் சாலை வரையில் உள்ள கூவம் கரையில், 1,100 மீட்டர் நீளத்திற்கும், ஐந்து மீட்டர் அகலத்திற்கும் உள்ள இடம், பூங்கா அமைக்க மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெள்ளக் காலங்களில் கூவம் ஆற்றில் நீரோட்டத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் பூங்கா அமைக்கப்படும். இவ்வாறு துணை முதல்வர் கூறினார்..