தினகரன் 31.08.2010
அதிகாரிகளால் வருவாய் இழப்பு தாராபுரம் நகராட்சி கூட்டத்தில் விவாதம்
தாராபுரம், ஆக. 31: தாராபுரம் நகரமன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாரிமுத்து, ஆணையர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:
சுகுமார் (மா.கம்யூ):
11&வது வார்டு உறுப்பினர் ஜெசோபானு பதவியை ராஜினாமா செய்தது என்னவாயிற்று?
தலைவர்:
அவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை.
சுகுமார்:
பின் ஏன் மன்றக் கூட்டத்திற்கு வருவதில்லை.
தலைவர்:
அவர் வெளி யூரில் வசித்து வருகிறார். அவரால் வரமுடிவதில்லை. அவ்வப்போது வந்து கையெழுத்து போட்டுவிட்டு செல்கிறார்.
கோவிந்தராஜ் (அதிமுக):
இது என்ன அநியாயம். அவரது வார்டில் இலவச டிவி வழங்கும்போது சரிவர வழங்கவில்லை. நகரமன்ற உறுப்பினர் இல்லாததால் பட்டியல் சரிவர தயாரிக்கப்படாமல் போனது. இதனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி இருக்க எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப் படாமல் இருப்பது மக்களை ஏமாற்றுவதாகும்.
தலைவர்:
நான் உறுப்பினரை தொடர்பு கொண்டேன். வருவதாக சொல்லியுள்ளார்.
கோவிந்தராஜ்:
பஸ்நிலையத்தில் பயணிகளுக்கென்று குடிநீர் வசதி முறையாக செய்யப்படாமல் இருக்கிறது.
தலைவர்:
குடிநீர் பைப் போடப்பட்டுள்ளது.
சுகுமார்:
அந்த தண் ணீரை பயணிகள் பயன் படுத்துவதில்லை கடைக்காரர்கள் தான் பயன் படுத்தி வருகின்றனர். எனவே பயணிகள் பார்வையில் படும்படி சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் என்ற பெயர் பலகை பொருத்த வேண்டும்.
ஆணையர் துரை:
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சுகுமார்:
பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தப்படாமல் மோட்டல்களில் நிறுத்தப்படுவதால் பயணிகளிடம் திருட்டு நடக்கிறது. அடிக்கடி விபத்து நடப்பதால் ஏராளமான உயிர் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. எந்த அதிகாரியாலும் நடவடிக்கை எடுக்க முடியவில்லையே ஏன்?
ஆணையர் துரை:
இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்படும்.
காமராஜ் (அதிமுக):
பஸ்நிலையத்தில் இருந்த ஓட்டல் கடை உரிமையாளர் மீது வழக்கு தொடுப்பதாக தெரிவித்துள்ளீர்கள். அவரால் நகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கு யார் காரணம்?
கோவிந்தராஜ்: பல ஆண்டுகளாக வாடகை கட்டாமல் இருந்துள்ளார் அதிகாரிகள் என்ன நடவடிக்கை மேற்கொண்டார்கள்?
சுகுமார்:
வைப்புத்தொகையை கணக்கு பார்க்காமலா அதிகாரிகள் இருந்துள்ளனர்? வருவாய் இழப்பிற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.
ஆணையர் துரை: அந்தகால கட்டத்தில் பணி செய்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வருவாய் இழப்பிற்கு காரணமாக இருந்திருந்தால். கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மன்றத்தில் விவாதம் நடைபெற்றது. பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.