தினமலர் 11.08.2010
அதிகாரிகள் கண்டுகொள்ளாத மாயமான நகராட்சி இடங்கள்
உடுமலை: உடுமலை நகராட்சிக்கு சொந்தமான, பொது உபயோகம், ரோடு, மைதானம், பூங்கா இடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலங்களை மீட்பது குறித்து அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.உடுமலை நகராட்சி பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட “லே–அவுட்‘கள் உள்ளன. 1992ம் ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டவையில், பொது உபயோகம், ரோடு, மைதானம், பூங்கா, திறவிடம் ஆகிய பயன்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் ஒப்படைக்கப்படாமல் உள்ளதோடு, மற்ற நகராட்சிக்கு சொந்தமான இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு பூங்கா, விளையாடும் இடம் மற்றும் திறவிடம் பாதுகாத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1959ன் படி, இது குறித்து முறையாக ஆய்வு செய்து, மீட்க வேண்டும் என நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில், நகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் ஆறு மாதமாக “மாயமான‘ நிலங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதில், 61 மனை பிரிவுகளில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டவையில், பெரும்பாலான இடங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன.அண்ணா பூங்கா உட்பட ஒரு சில மட்டும் நகராட்சி வசம் உள்து. 30க்கும் மேற்பட்ட மனைப்பிரிவுகளில் விளையாட்டு திடலுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களும், பத்துக்கும் மேற்பட்ட திறவிடங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டுள்ளன. 40க்கும் மேற்பட்ட லே–அவுட்களில் பொது உபயோகத்திற்கு ஒதுக்க பட்ட இடங்கள், வீடுகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளாகவும், திருமண மண்டபங்களாவும் மாறியுள்ளன. நகராட்சியில் ஏற்கன வே பயன்படுத்தப்பட்டு வந்த ஸ்கீம் ரோடு, இணைப்பு சாலைகள், பொது வழித்தடங்கள் என நூற்றுக்கணக் கான வழிகள் அடைக்கப்பட்டு, தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
நகராட்சி “ரீடிங் ரூம்‘ என குறிப்பிடப்பட்டுள்ள இடம் “சூதாட்ட கிளப்‘ ஆக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு, நகராட்சிக்கு சொந்தமான, 75 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் மாயமாகியுள்ளன. நகரின் முக்கிய இடங்களில் ஒரு சென்ட் நிலம் மூன்று லட்சம் முதல் 15 லட்சம் வரை விற்று வரும் நிலையில், இவற்றின் மதிப்பு 100 கோடி ரூபாய் வரை இருக்கும் எனவும், மீதம் உள்ள “லே – அவுட்‘ களையும் ஆய்வு செய்தால், மேலும் பல கோடி மதிப்பிலான நிலங்கள் விற்பனையானது தெரியவரும் என தெரிவித்தனர்.
இது குறித்து மே மாதம் நடந்த நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் வைக்கபட்டது. அதில், நகராட்சி இடங்கள் குறித்த கணக்கெடுப்பு குறித்த பட்டியல் தயார் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிடவும், விடுபட்ட இனங்களை விரைவில் கணக்கெடுக்கவும், எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கபட்டு நகராட்சி இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறிவித்து மூன்று மாதம் ஆன நிலையில் மீதம் உள்ள இடங் களை கணக்கெடுப்பது குறித்தும், கண்டு பிடித்த இடங்களை மீட்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.