தினமலர் 20.02.2010
அதிரடிஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்:தாம்பரம் மேம்பாலப் பணியில் வேகம்
தாம்பரம்:தாம்பரம் ரயில்வே மேம்பால திட்டத்தில், தாம்பரம்–வேளச்சேரி சாலையில் பணிகளை தொடர்வதற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புக்கள் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன. இதையடுத்து, அங்கு 2.5 கோடி ரூபாய் மதிப்பில் சாலையை அகலப்படுத்தவும், மேம்பால பணிகளை துவங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலை, முடிச்சூர் சாலை, தாம்பரம்–வேளச்சேரி சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில், ஒரு மேம்பாலம் கட்டும் திட்டம் 36 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த ஆண்டு துவங்கப் பட்டது.ஜி.எஸ்.டி., சாலையில் நான்கு பகுதிகளிலும், முடிச்சூர் சாலையிலும் பணிகள் துரிதமாக நடந்தன. ரயில்வே பகுதியிலும் பிரம்மாண்டமான “கான்கிரீட் டெக்‘ அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டரி அமைக்கும் பணியும் நடந்தது.கிழக்கு தாம்பரம், வேளச்சேரி சாலையில், நெடுஞ்சாலைத் துறை இடத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புக்கள் செய்யப்பட்டிருந்ததால், அப்பகுதியில் பில்லர்கள் மட்டுமே அமைக்கப்பட்டன. அடுத்த கட்ட பணிகளுக்காக ஆக்கிரமிப்புக்களை அகற்ற முயன்ற போது, சிலர் கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கினர். இதனால், தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.தாம்பரம்–வேளச்சேரி சாலையில் ரயில்வே கேட் முதல் பழைய கோர்ட் வளாகம் வரை மொத்தம் 150 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டது. இவற்றில், கோர்ட் தடை இல்லாத 110 கட்டடங்களை இடிக்க, நோட்டீஸ் வழங்கப்பட்டு, நேற்று காலை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கும் பணிகள் துவங்கப்பட்டன. தாம்பரம், சேலையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்த மேம்பாலத்தில் கிழக்கு தாம்பரம் பகுதியில் மட்டுமே பணிகள் மந்தமாக இருந்தது.பாலப்பணிகளுக்கு தேவையான நிலம், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு வருவதால், இங்கும் மிக விரைவில் பணிகள் துவங்கி, துரிதமாக முடிக்கப்படும்.
இந்த பகுதியில் பாலத்தின் “ராம்ப்‘ இறங்கும் இடத்திலிருந்து 800 மீட்டர் தூரத்திற்கு 2.5 கோடி ரூபாய் மதிப்பில் சாலையை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.நிலம் முழுவதும் நெடுஞ்சாலைத் துறை வசம் வந்ததும், சாலை அமைக்கும் பணிகளும், பால கட்டுமான பணிகளும் துவங்கும். முடிச்சூர் சாலை, ஜி.எஸ்.டி., சாலை, வேளச்சேரி சாலையை இணைக்கும் “ரோட்டரி‘ அமைப்பதற்காக போக்குவரத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த பணிகளும் துரிதப்படுத்தப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். நெரிசலுக்கு தீர்வு:தாம்பரம் ரயில்வே கேட்டிலிருந்து கிழக்கு தாம்பரம் பகுதியில் மேம்பாலத்திற்கான பில்லர்கள் அமைக்கப்பட்டிருப்பதால், அங்கு சாலை குறுகலாக உள்ளது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பஸ் ஸ்டாண்ட் எம்.சி.சி., கல்லூரி அருகே மாற்றப்பட்டது.தற்போது, ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருவதால், கட்டட எச்சங்களை அகற்றிய பிறகு, அங்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ரயில்வே கேட்டில் இருந்து வரும் வாகனங்கள் ஒரு வழி சாலையிலும், அங்கிருந்து வரும் வாகனங்கள் தற்போதுள்ள சாலையிலும் செல்ல வசதியாக அமையும். நடு பகுதியில் மேம்பால பணிகள் நடக்கும். இந்த கட்டடங்களை விரைந்து அப்புறப்படுத்தி, சாலை அமைத்தால் தான் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும