தினமலர் 11.03.2010
அதிரடி: ஆக்கிரமிப்பாக அமைந்த கோவில் அகற்றம்; மருத்துவ மையம் விரிவாக்கத்திற்காக மாற்றம்
புளியந்தோப்பு: புளியந்தோப்பில் மருத்துவ மையத்தின் விரிவாக்கப் பணிக் காக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அம்மன் கோவில் ஒன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.
புளியந்தோப்பு, 41வது வார்டில் மகளிர் நல மருத்துவ மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அம்மருத்துவ மையம் பல லட்சம் ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், மருத்துவ மைய வளாகத்தின் உட்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக அம்மன் கோவில் ஒன்று ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது. அந்த இடம் புதிய மருத்துவமனை வளாகம் அமைக்க தேவைப்பட்டது. இதையடுத்து, அம்மன் கோவிலை அகற்ற மாநகராட்சியினர் முடிவு செய்தனர். பெரம்பூர் தாசில்தார் எத்திராஜுலு தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள், பொக்லைன் உதவியுடன் நேற்று காலை, அம்மன் கோவிலை அகற்றினர். பாதுகாப்பிற்காக புளியந்தோப்பு உதவிக் கமிஷனர் சரவணன் மேற்பார்வையில், நான்கு இன்ஸ் பெக்டர்கள் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அம்மன் கோவில் அகற்றப்பட்ட தகவல் கிடைத்ததும் அப்பகுதியை சேர்ந்த பெண் கள் அங்கு கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.