தினமணி 16.12.2009
அனுமதியின்றி வைத்துள்ள நிழற்குடைகளை ஒரு வாரத்துக்குள் அகற்ற ஆணையர் உத்தரவு
மதுரை, டிச.15:மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி பேருந்து நிறுத்தங்களில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடைகளை ஒருவார காலத்துக்குள் அப்புறப்படுத்தவேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு அப்புறப்படுத்தாவிடில் மாநகராட்சி மூலம் அந்த நிழற்குடைகள் அகற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் ஒரேமாதிரியாக நிழற்குடைகள் அமைக்கப்படவுள்ளன. நகரில் மாநகராட்சியின் அனுமதியைப் பெறாமல் பல தனியார் நிறுவனங்கள் தங்களது விளம்பர போர்டுகளுடன் கூடிய நிழற்குடைகளை பல பேருந்து நிறுத்தங்களில் அமைத்துள்ளன. இவ்வாறு நகரில் மட்டும் அனுமதியின்றி 350 நிழற்குடைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிழற்குடைகள் அனைத்தும் இன்னும் ஒருவார காலத்துக்குள் அப்புறப்படுத்தப்படவேண்டும்.
அதேபோல, போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி சாலையோரங்களில் கம்பி மூலம் வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகளையும் அகற்றவேண்டும். அவ்வாறு அப்புறப்படுத்தப்படாவிடில், மாநகராட்சி மூலம் அவை அகற்றப்படும் என்றார் ஆணையர்.