தினமலர் 09.04.2010
அனுமதியில்லாத இரு சக்கர வாகன ஸ்டாண்டுகளுக்கு கிடுக்கிப்பிடி : லைசென்ஸ் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு
மதுரை : மதுரையில் அனுமதியில்லாமல், இயங்கும் தனியார் இரு சக்கர வாகன ஸ்டாண்டுகளிடம் லைசென்ஸ் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மதுரையில் முக்கிய இடங்களில் தனியார் இடம் இருந்தால் போதும், அதை இரு சக்கர வாகன ஸ்டாண்ட் ஆக மாற்றி, ‘காசு பார்த்து‘ விடுவர். தமிழகத்தில் எங்குமே இப்படிப்பட்ட தனியார் ஸ்டாண்டுகளை காண முடியாது. பல ஆண்டுகளாக ‘ஜோராக‘ நடக்கும் இத்தொழிலை, மாநகராட்சியும் கண்டுகொள்ளாமல் இருந்தது. ஸ்டாண்டுகளை நடத்துவோரும், மாநகராட்சிக்கு எந்த வரியையும் கட்டணத்தையும் செலுத்துவதில்லை.
வருமானத்தில் மட்டுமே ஸ்டாண்டுகள் குறியாக இருக்கின்றன. இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் பாதுகாப்பு இருப்பதில்லை. மழையிலும் வெயிலிலும், தூசியிலும் நின்று, வீணாகின்றன. 24 மணி நேரத்திற்கு ஐந்து ரூபாய் வரை இவர்கள் வசூலிக்கின்றனர். அதற்கு தகுந்த வசதிகள் செய்து தருவதில்லை. பல ஸ்டாண்டுகளில் உள்ளே இடம் இல்லாமல் ரோட்டில் வாகனங்களை நிறுத்தச் சொல்லி விட்டு, பணத்தை மட்டும் பெறுகின்றனர்.
ஸ்டாண்டுகளின் அளவுக்கு ஏற்ப லைசென்ஸ் கட்டணத்தை நிர்ணயித்து, வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மதுரையில் 25 ஸ்டாண்டுகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வருவாயை பெருக்கலாம் என மாநகராட்சி எண்ணுகிறது.