அனுமதியில்லா கட்டடங்கள் மீது நடவடிக்கை
கோத்தகிரியில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோத்தகிரி வாழ் மக்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் கணேஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். இலங்கையை நட்பு நாடாக பார்க்கக் கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. திருச்சியில் மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக நீலகிரியை மாற்ற மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும். கோத்தகிரி பகுதியில் பெருகும் அனுமதியில்லா கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டமைப்பு பொதுச்செயலர் எஸ்.அமீது, ஒருங்கிணைப்பாளர்கள் பரத், ஜெயக்குமார், துணைத் தலைவர் சத்தியசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.