அனுமதி பெறாத ஆயிரம் குடிநீர் இணைப்புகள்
பொன்னேரி பேரூராட்சியில், அனுமதி பெறாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டுக் குடிநீர் இணைப்புகள் இருப்பது அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொன்னேரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், சுமார் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இவற்றில் 2,800 குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மட்டுமே முறையாக பேரூராட்சியில் முன்வைப்புத் தொகை செலுத்தி, குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாகவும் எஞ்சியுள்ள குடியிருப்புகள் அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு அமைத்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
எனவே, பல ஆண்டுகளாக நிலவும் இந்த முறைகேடு குறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட மக்கள் மேம்பாட்டு சங்கத்தினர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஆகியோருக்கு மனு அளித்திருந்தனர். இதையடுத்து, பொன்னேரி பேரூராட்சியின் 18 வார்டுகளில் 2 வார்டுக்கு ஒரு செயல் அலுவலர் வீதம், மொத்தம் 9 செயல் அலுவலர்களை நியமித்து அவர்களை வீடுகள் தோறும் சென்று ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 2 நாளாக செயல் அலுவலர்கள், பேரூராட்சி பொது சுகாதார ஊழியர்களுடன் இணைந்து வீடு, வீடாக ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் இருப்பது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த ஆய்வு முடிவுகள் பேரூராட்சி உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு வைத்திருப்பதன் மூலம் பேரூராட்சிக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் குடிநீர் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.