தினகரன் 29.06.2010
அனைத்து மாநகராட்சிகளிலும் ஓய்வூதியம் வழங்க தனிப்பிரிவு நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவு
நெல்லை, ஜூன் 29: தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் ஓய்வூதியம் வழங்க தனிப்பிரிவு அமைக்க நகராட்சி நிர்வாக இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் ஓய்வூதியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கியதில் நடந்த சில முறைகேடுகள் நகராட்சி நிர்வாக இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபோன்ற முறைகேடுகள் பிற மாநகராட்சிகளிலும் ஏற்படாவண்ணம் ஒரே சீராக ஓய்வூதியம் வழங்க நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மாநகராட்சிகளில் ஓய்வூதியத்திற்கு என தனியாக கணக்குகள் பராமரிக்கப்பட வேண்டும். ஓய்வூதியர் ரொக்க பதிவேடு வங்கி கணக்குகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒத்திசைவு செய்யப்பட வேண்டும். இறந்துபோன மாநகராட்சி ஓய்வூதியதாரர்களின் விபரங்களை சம்பந்தப்பட்டவர்களின் வாரிசுதாரர் வந்து தெரிவிக்கும் வரை காத்திராமல், விபரங்களை மண்டல அலுவலகங்களில் இருந்து மாதம்தோறும் பெற்று, அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உடனடியாக நிறுத்தம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியரை நேரில் வரவழைத்து சரிபார்த்து கையொப்பம் இடுவது உதவி ஆணையர்(கணக்கு) மற்றும் ஓய்வூதிய அலுவலரின் பொறுப்பாகும். ஒவ்வொரு மாநகராட்சியிலும் ஓய்வூதியம் வழங்குவதற்கு என தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். ஓய்வூதியதாரர்களை துப்புரவு, சுகாதாரம், கல்வி, மாநகராட்சி அலுவலக பணியாளர்கள், குடிநீர் வடிகால் என 5 வகையாக பிரித்து அப்பணிகளை மேற்கொள்ள போதுமான பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதை கண்காணிக்க ஓய்வூதிய பிரிவில் ஒரு தலைவரும் நியமிக்கப்பட வேண்டும். இப்பிரிவில் தற்காலிக பணியாளர்கள் மற்றும் வெளிநபர்கள் எவரையும் அனுமதிக்க கூடாது. அச்சிடப்பட்ட ஓய்வூதிய பணிக்குழு தணிக்கை பதிவேடு உரிய படிவத்தில் பராமரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சியில் ஓய்வூதியர்களுக்கென தனிப்பிரிவு அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.