தினமலர் 06.08.2010
அன்னூர் பேரூராட்சியில் நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் கவுன்சிலர் புகார்
அன்னூர் : “வளர்ச்சிப் பணிக்கு நிதி ஒதுக்குவதில், பேரூராட்சி பாரபட்சமாக நடந்து கொள்கிறது‘ என, பா.ஜ., கவுன்சிலர் குற்றம் சாட்டியுள்ளார்.அன்னூர் பேரூராட்சியின் 12வது வார்டு கவுன்சிலர் சாந்தி, கோவை கலெக்டர் உமாநாத்திடம் அளித்த மனு:அன்னூர் பேரூராட்சியில் பொதுநிதியில் வளர்ச்சி பணிகள் செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. சில வார்டுகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. வளர்ச்சி பணிகளில் அங்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 12வது வார்டு புறக்கணிக்கப்படுகிறது. பணிகள் செய்ய டெண்டர் விடுவதிலும், வேலை உத்தரவு வழங்குவதிலும் மெத்தனம் காட்டப் படுகிறது.
தென்னம்பாளையம் ரோடு, எக்சேஞ்ச் ரோடு ஆகியவற்றில் சாக்கடை வடிகால் அமைக்க பல மாதங்களாக வலியுறுத்தியும் பணிகள் துவங்கவில்லை. பஸ் ஸ்டாண்டில் நடுப்பகுதியில் கான்கிரீட் கற்கள் பெயர்ந்து குழிகள் ஏற்பட்டுள்ளன. அவிநாசி ரோடு, சத்தி ரோடு உள்பட பல இடங்களில் குப்பைகள் கொட்டும் மையங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந் துள்ளன. பேரூராட்சிக்கு என தனி செயல் அலுவலர் இல்லை. சர்க்கார் சாமக்களம் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பாக உள்ளார்.அவரும் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே அலுவலகத்திற்கு வருகிறார். கொசு மருந்து பல வாரங்களாக தெளிக்காததால் கொசுக்கள் அதிகரித்து நோய் பரவுகிறது. தெற்கு மற்றும் வடக்கு துவக்கப்பள்ளியில் கழிப்பிடம் இல்லாமல் மாணவ, மாணவியர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன் படுத்துகின்றனர். பேரூராட்சிக்கு தனி செயல் அலுவலர் நியமித்து, அனைத்து வார்டுகளிலும் பாரபட்சமில்லாமல் நிதி ஒதுக்கி வளர்ச்சி பணிகளை வேகப்படுத்தவும், அரசு துவக்கப்பள்ளிகளில் கழிப்பிடம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.