தினமணி 26.08.2010
அமெரிக்கத் தூதரக நடைபாதையில் இருக்கைகளுடன் கூடிய நிழற்கூரைகள்
சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரக நடைபாதையில் நிழற்கூரைகள் அமைப்பது தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்கத் துணைத் தூதர் ஆண்ட்ரு டி
.சிம்கின் மற்றும்சென்னை, ஆக. 25: சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரக நடைபாதையில் இருக்கைகளுடன் கூடிய நிழற்கூரைகள் அமைக்கப்பட உள்ளன என்று மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் விசாவுக்காகக் காத்திருக்கும் பொது மக்களின் பயன்பாட்டுக்காக நிழற்கூரைகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், ஆணையர் ராஜேஷ் லக்கானி மற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் ஆன்ட்ரூ டி.சிம்கின், பிரையன் டால்டன், பின்னி ஜேக்கப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, அண்ணா சாலையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நடைபாதையில் நிழற்கூரைகள் அமைக்கப்படும் இடத்தை மேயர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம், ஆந்திரம், கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அமெரிக்கா செல்வதற்காக விசா பெற சென்னை துணைத் தூதரகத்துக்கு வருகின்றனர்.
பொதுமக்கள் நீண்ட நேரம் வெயிலிலும், மழையிலும் வெளியில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, பொதுமக்களின் வசதிக்காக நிழற்கூரைகள் அமைப்பது குறித்து அமெரிக்கத் துணைத் தூதரக அதிகாரிகளிடம் பேச்சு நடத்தப்பட்டது.
இதன்படி நிழற்கூரையுடன் கூடிய இருக்கைகள் அமைப்பது தொடர்பாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை குறித்து, அப்போது அமெரிக்க அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.
தூதரகத்தையொட்டி உள்ள நடைபாதையை போதிய அளவுக்கு அகலப்படுத்தி தடுப்பு வேலி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நிழற்கூரைகள் அமைப்பது தொடர்பாக, மீண்டும் அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றார் மா.சுப்பிரமணியன்.