தினமலர் 30.07.2010
அம்பத்தூரில் எரிவாயு தகன மேடை
அம்பத்தூர் : அம்பத்தூர் நகராட்சியில் 1 கோடி ரூபாய் செலவில் நவீன எரிவாயு தகன மேடை கட்டுமான பணி முடிந்து, விரைவில் திறக்கப்படவுள்ளது.அம்பத்தூர் நகராட்சியில் 20க்கும் மேற்பட்ட சுடுகாடுகள் மற்றும் இடுகாடுகள் உள்ளன.மக்கள் தொகை பெருக்கத்தால், குடியிருப்பிலிருந்து வெகு தூரத்திலிருந்த சுடுகாடுகளை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீடுகள் வந்துவிட்டன.சுடுகாடுகளில் பிணத்தை எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில், எரிவாயு தகன மேடை அமைக்க நகராட்சி முடிவு செய்தது.இதையடுத்து, அம்பத்தூர் நகராட்சியில் முதல் எரிவாயு தகன மேடை அயப்பாக்கம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.ஒரு கோடி ரூபாய் செலவில், இந்த தகன மேடை 7 ஆயிரம் சதுரடியில் அமைந்துள்ளது.இந்த நவீன எரிவாயு தகன மேடை பணி முடிந்து விட்டது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும்.இங்கு, 6 லட்சம் ரூபாய் செலவில் ஜெனரேட்டர் வசதியும் உள்ளது. இந்த நவீன எரிவாயு தகன மேடை, விரைவில் திறக்கப்படவுள்ளது.