தினமலர் 16.04.2010
அம்பத்தூர் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை : நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
அம்பத்தூர் : அம்பத்தூர் நகராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கவுன்சிலர்கள் அனைவரும் புகார் தெரிவித்ததால், நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அம்பத்தூர் நகராட்சிக் கூட்டம் தலைவர் சேகர் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் ஆஷிஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தி.மு.க., கவுன் சிலர்கள் பாலகுமார், சம்பத் எழுந்து, ‘அம்பத்தூர் முழுவதும் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படுகிறது. லாரிகளில் குடிநீர் சப்ளையும் செய்யப்படுவதில்லை. எனவே, ஆழ்துளை குழாய் அமைக்க வேண்டும்‘ என்றனர்.சுந்தரி தி.மு.க.,: ‘எங்கள் பகுதியில் குடிநீர் குழாய் சேதமடைந்து விட்டதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது‘ என்றார். இதற்கு பதிலளித்த தலைவர் சேகர்,’குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க புழல் அருகில் உள்ள 3வது வார்டில் போர் வெல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.
12வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மதி: ‘வார்டில் தெரு நாய்கள் அதிகம் உள்ளது. அவற்றை ஒழிக்க வேண்டும்’ என்றார். இவரது கருத்தை அனைத்து கவுன்சிலர் களும் ஆதரித்தனர். கூட்டத்தில், 132 தீர்மானங்களும், அவசர கூட்டத்தில் 15 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.