தினமணி 19.05.2013
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
தினமணி 19.05.2013
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கும், பாதுகாவலர்களை நியமிப்பதற்கும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையின் 200 வார்டுகளிலும் உள்ள அம்மா உணவகங்களில் ரூ.1-க்கு
இட்லியும், ரூ.5-க்கு சாம்பார் சாதமும், ரூ.3-க்கு தயிர்சாதமும்
வழங்கப்பட்டு வருகிறது.
அம்மா உணவகம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை சுமார் ஒரு கோடியே 75
லட்சம் இட்லிகளும், 35 லட்சம் சாம்பார் சாதங்களும், 22 லட்சம் தயிர்
சாதங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும்
அம்மா உணவகத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த சென்னை மாநகராட்சியில் மட்டும்
ஆண்டுக்கு ரூ.34.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அம்மா உணவகத்துக்கு மக்களிடம் அமோக வரவேற்பு இருப்பதால்,
அங்கு காலையில் ரூ.5-க்கு பொங்கலும், மதியம் ரூ.5-க்கு எலுமிச்சை சாதம்
அல்லது கறிவேப்பிலை சாதமும், மாலையில் ரூ.3-க்கு 2 சப்பாத்திகளும்
வழங்கப்படும் என அண்மையில் முதல்வர் அறிவித்திருந்தார்.
கண்காணிப்பு கேமரா: முதல்வரின் புதிய அறிவிப்பு காரணமாக அம்மா
உணவகங்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் 200 இடங்களிலும்
கண்காணிப்புக் கேமரா பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்கள் மற்றும் திருட்டைத் தடுக்க பாதுகாவலர்களை நியமனம்
செய்யவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது:
அம்மா உணவகத்துக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே
வருகிறது. இந்த நிலையில் 200 வார்டுகளிலும் உள்ள அம்மா உணவகங்களின்
பாதுகாப்பைக் கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
பாதுகாவலர்களை நியமிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்
அவர்.