அம்மா உணவகத்தில் கூட்டம் அலைமோதுகிறது ‘‘அரைவயிறு கஞ்சி குடித்த நான் இப்போது வயிறாற இட்லி சாப்பிடுகிறேன்’’ சின்னஞ் சிறு மழலைகள் மகிழ்ச்சி
சென்னையில் தினமும் கால்வயிறு கஞ்சி குடித்த ஏழை குழந்தைகள் பலர், அம்மா உணவகம் தொடங்கப்பட்டதிலிருந்து வயிறாற இட்லி சாப்பிடுவதாக தெரிவித்தனர்.
குழந்தைகளுக்கு கஞ்சி
பொருளாதாரத்தில் நலிவடைந்த பலர் தங்களுடைய வீட்டு குழந்தைகளுக்கு, காலையில் வேலைக்கு போகிற அவசரத்தில் காலை உணவு தயாரிக்க முடியாததால் முந்தைய நாள் சமைத்த சோற்றில் தண்ணீர் ஊற்றி கஞ்சியாக குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கின்றனர்.இதனை குழந்தைகள் விரும்பி குடிக்காமல் பெயருக்கு கொஞ்சம் அரைவயிற்றுக்கு கஞ்சி குடித்துவிட்டு பள்ளிகளுக்கு சென்று வந்தனர். பல குடும்பங்களில் அது தான் நிலைமை. ஆனால் இப்போது 2 ரூபாய் அல்லது 3 ரூபாய் குழந்தைகளுக்கு கொடுத்தால், அருகில் உள்ள அம்மா உணவகத்திற்கு சென்று 2 இட்லி, சாம்பார் வாங்கி சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.
சிறுவர்கள் கூட்டம்
இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமியர் முதல் வீட்டில் இருக்கும் வயதான முதிர்ந்த தாத்தா, பாட்டிகளின் கூட்டமும் அம்மா உணவகத்தில் அலைமோதுகின்றன. பலநடுத்தர குடும்பத்தில் காலையில் கஞ்சி குடிப்பதற்கு பதிலாக 2 ரூபாய், 3 ரூபாய் கொடுத்தால் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர். முதல்–அமைச்சர் ஜெயலலிதா முதன் முறையாக திறந்து வைத்த சாந்தோம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று சிறுவர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு 3 ரூபாய் கொடுத்து சென்றதால், சிறுவர்கள் 3 இட்லி வாங்கி சாப்பிட்டனர். அப்போது ஒரு சிறுவன் அங்கிருந்த முதல்–அமைச்சர் படத்தை பார்த்து ‘‘இந்த அம்மா புண்ணியத்தில் தான் இட்லி வாங்கி சாப்பிடுகிறேன்,’’ என்று கூறியபடி ஜெயலலிதா படத்திற்கு முத்தம் கொடுத்தது நெஞ்சை தொடுவதாக இருந்தது. ஆங்காங்கே கூலிவேலை உட்பட பல்வேறு வேலைகளுக்கு சென்ற ஏழை பெண்கள் அம்மா உணவகத்தில் சாம்பார் சாதம், தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டுவிட்டு, ஒட்டுமொத்தமாக கூறியதாவது:–
‘‘சாம்பார் சாதம், தயிர் சாதம் நன்றாக ருசியாகவே உள்ளது, இருந்தாலும் மேலும் ஒரு ரூபாய் அதிகம் வாங்கி கொண்டு சாப்பாட்டுக்கு தொட்டுக்கொள்வதற்கு ஊறுகாய், துவையல், வத்தல், வடகம் போன்று எதாவது ஒன்று வழங்கினால் மேலும் சுவையாக சாப்பிடுவதற்கு வசதியாக இருக்கும்’’ என்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–
அம்மா உணவகம்
கடந்த பிப்ரவரி 19–ந்தேதி முதல் கட்டமாக சென்னையில் 15 உணவகங்களை, முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு பகுதிகளாக திறக்கப்பட்டு, தற்போது, 200 உணவகங்கள் இயங்குகின்றன. இவை அனைத்தும் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்குகிறது. தினசரி காலை 7 மணி முதல் காலை 10 மணி வரையில் இட்லி, சாம்பாரும், பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் விற்பனை செய்யப்படுகிறது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 1,000 விடுதிகளில் மீதி உள்ளவை 3 மாதங்கள் கழித்து, பல்வேறு கட்டங்களாக திறக்கப்படுவதாக கூறப்படுகிறது.
3 லட்சம் இட்லி
200 உணவகங்களிலும் சராசரியாக காலையில் 80 ஆயிரம் பேரும், மதியம் ஒரு லட்சம் பேரும் சாப்பிடுகின்றனர். இதில் காலையில் 3 லட்சம் இட்லிகளும், மதியம் 60 ஆயிரம் சாம்பார் சாதம், 40 ஆயிரம் தயிர் சாதம் விற்கப்படுகிறது. ஆக மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் அம்மா உணவகங்களில் சாப்பிடுகின்றனர்.
சுயஉதவிக்குழு பெண்கள்
இனி புதிதாக அமைக்கப்படும் உணவகங்கள் தேவைப்பட்டால் இந்து சமய அறநிலையத்துறை, குடிசை மாற்று வாரியம், மெட்ரோ வாட்டர் இடங்களிலும் அமைக்கப்படும். உணவகங்களை மாநகராட்சியின் சுகாதாரத்துறை நிர்வாகம் செய்கிறது. உணவகங்களுக்கு சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் மகளிர் மேம்பாட்டு ஆணையம் மூலம் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு இரண்டு வகையாக பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குறிப்பாக காலை 4 முதல் காலை 11 மணி வரையிலும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் இரண்டு பிரிவுகளாக பிரித்து பணி ஒதுக்கப்படுகிறது.
உணவுகளின் தரம்
ஏப்ரல் 14–ந்தேதி தமிழ் புத்தாண்டையொட்டி புதிதாக அம்மா உணவகங்கள் திறக்கப்படவில்லை. அடுத்த 3 மாதங்களுக்கு பிறகு தான் அம்மா உணவகங்கள் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதத்திற்கு கூடுதலாக ஊறுகாய் மற்றும் துவையல் வழங்குவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சென்னை மாநகரில் சாந்தோம், டெய்லர்ஸ் ரோடு, புளியந்தோப்பு, அம்பத்தூர், பாடி உணவகங்களில் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். உணவகங்களுக்கு அரசு சார்பில் ரேஷன் அரிசி ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.