அம்மா உணவகம்:மகளிருக்கு உணவு தயாரிக்கும் பயிற்சி
திருப்பூரில் அம்மா உணவகத்தில் வேலை செய்யும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மாநகராட்சி சார்பில் உணவு தயாரிக்கும் பயிற்சி சனிக்கிழமை முதல் அளிக்கப்படுகிறது.
திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் பழைய பேருந்து நிலையம், குமரன் வணிக வளாகம், முதல் மண்டல அலுவலகம் உள்பட மொத்தம் 10 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட உள்ளது. இதற்காக தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 10 இடங்களிலும் புதிதாகக் கட்டடம் கட்டும் பணி நடைபெறுகிறது.
அம்மா உணவகத்தில் உணவு தயாரிக்கும் பொறுப்பு மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஒரு மகளிர் சுய உதவிக்குழுக்கு ஒரு உணவகம் என 10 குழுக்களிடம் பொறுப்பு அளிக்கப்பட உள்ளது. ஒரு குழுவில் உள்ள 12 மகளிர் இடம்பெறுவர். ஒருவருக்கு தினமும் ரூ.300 வீதம் சம்பளம் வழங்கப்படும். அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் அனைத்தும் மாநகராட்சி மூலமாக விநியோகம் செய்யப்படும்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துப்புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் உணவு தயாரிக்கும் பயிற்சியில் சுயஉதவிக் குழுவினர்
ஈடுபட்டனர். நகர்நல அலுவலர் செல்வக்குமார் மேற்பார்வையில், 3 மகளிர் குழுக்களைச் சேர்ந்த மகளிர் சாம்பார் சாதம் தயாரித்தனர். ஒருவார காலத்துக்கு மகளிர் குழுக்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.