தினமணி 16.12.2009
அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துங்கள்: ஆட்சியர்
கரூர், டிச. 15: அயோடின் கலந்த உப்பை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெ. உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் அயோடின் தின விழா கரூர் வாங்கலில் நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், அயோடின் சத்து விழிப்புணர்வு கண்காட்சியை திறந்து வைத்து ஆட்சியர் மேலும் பேசியது:
உடல்நலமும், மனநலமும் ஒருங்கே இருந்தால்தான் நாம் சிறப்பாகச் செயல்பட முடியும். உணவு வகைகளில் போதிய அயோடின் சத்துடன் கூடிய உணவு வகைகளை மக்கள் உட்கொள்ளாததன் காரணத்தினால், அயோடின் குறைபாடு தொடர்பான பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, அயோடின் கலந்த உப்பை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.
அயோடின் கலந்த உப்பை உட்கொள்ளும் கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். குழந்தையின் மூளை, உடல் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையை ஊட்டச்சத்து உணவுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். குழந்தைகளில் ஆண், பெண் என்ற பேதம் வேண்டாம். அளவான குடும்பத்துக்கு 2 குழந்தைகள் போதுமானது. குழந்தைகளுக்கு குடும்பத்தில் நல்ல சூழ்நிலையில் வளர்கின்ற வாய்ப்பை பெற்றோர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார் உமாமகேஸ்வரி.
இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் சி. கற்பகம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் க. சதாசிவம், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி, வட்டாட்சியர் அ. தர்மராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபிநாத், உலகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தாந்தோன்றிமலை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் செந்தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.