அரசின் திட்டங்களை வழங்க விவசாயிகளை தேடி, அலுவலர்கள் செல்கிறார்கள் உழவர் பெருவிழாவில், மேயர் பேச்சு
அரசின் திட்டங்களை விளக்கிக்கூற விவசாயிகளை தேடி அலுவலர்கள் செல்கிறார்கள் என்று மேயர் கூறினார்.
விவசாயிகளைத் தேடி…
வேலூர் மாநகராட்சியில் அடங்கிய ஆவாரம்பாளையத்தில் உழவர்பெருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை துறை உதவி இயக்குனர் சிவக்குமார் சிங் தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த காலங்களில் அரசின் திட்டங்கள் மற்றும் பயன்பாடுகளை தெரிந்து கொள்ள விவசாயிகள் வேளாண்மை அலுவலகங்களுக்கு சென்று வந்தனர். அப்போது அவர்கள் சிரமங்களுக்கும் ஆளானார்கள். எனவே இந்த அரசு அந்த நிலைமையை மாற்றியுள்ளது.
அதாவது விவசாயிகளைத் தேடி வேளாண்மை அலுவலர்கள் செல்கிறார்கள். அப்போது அவர்கள் விவசாயிகளிடம் விவசாய கடன் பெறுவதற்கான வழிமுறைகள், புதிய பயிர் திட்டம், திருந்திய நெல் சாகுபடி திட்டம், உரமானியம் மற்றும் அரசின் நலத்திட்டங்களை விவசாயிகளிடம் விளக்கி கூறுவதுடன் அந்த திட்டங்களில் பயன் பெறவும் உதவி செய்து வருகிறார்கள்.
நலத்திட்ட உதவிகள்
அதைத்தொடர்ந்து மேயர், திருந்திய நெல் சாகுபடி திட்டத்தில் சாகுபடி செய்த 2 விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ. 2 ஆயிரம் வழங்கினார். ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேட்டை 3 பேருக்கு வழங்கியதுடன் மரக்கன்றுகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் கணியம்பாடி ஒன்றியக்குழு தலைவர் ராகவன் மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால் நடைத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.