தினமலர் 04.02.2010
அரசு கட்டடங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் : பல ஆண்டு வரி பாக்கியை கண்டுகொள்ளாததால் மீண்டும் ஜப்தி
மதுரை: மதுரை மாநகராட்சிக்கு பல்வேறு வகைகளில் 81 கோடி ரூபாய் வரி நிலுவை வசூலாக வேண்டி உள்ளது. வரி பாக்கி செலுத்தாத, அரசு கட்டடங்களுக்கு மீண்டும் ஜப்தி நோட்டீஸ் அனுப்ப மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மதுரை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் மற்றும் அரசு கட்டடங்கள், அவசியம் வரி செலுத்த வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக, மாநகராட்சி அதிகாரிகள் இதில் போதிய கவனம் செலுத்தவில்லை. சில அலுவலர்கள், புதிய கட்டடங்களுக்கு வரி விதிக்கும் போது, “கவனிப்புக்கு‘ ஆசைப்பட்டு, கட்டடத்தை அளக்காமல் இழுத்தடிக்கின்றனர். இப்படியே 81 கோடி ரூபாய் வரை வரி நிலுவை, மாநகராட்சிக்கு வர வேண்டி உள்ளது. இதனால் நிதி நெருக்கடியில் மாநகராட்சி சிக்கித் தவிக்கிறது. அப்போதைய அதிகாரிகளின் மெத்தனத்தால், இப்போதைய அதிகாரிகள், வேறு வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஓடி ஓடி வரி வசூலிக்கும் நிலை உள்ளது. தற்போதைய நிலவரப்படி மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் 25 கோடி, குடிநீர் கட்டணம் மூலம் 33 கோடி, அரசு கட்டடங்களிடம் சொத்து வரி 9 கோடி, தொழில் வரி 3 கோடி, மாநகராட்சி கட்டடங்களின் குத்தகை தொகை ஒரு கோடி, சாக்கடை பராமரிப்பு கட்டணம் 10 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. ஆக மொத்தம் 81 கோடி ரூபாய் வரி பாக்கி வசூலாக வேண்டி உள்ளது. குழுக்கள் அமைப்பு: மார்ச் மாதத்திற்குள் பெரும்பாலான நிலுவை தொகையை வசூலித்தாக வேண்டிய கட்டாயத்தில் மாநகராட்சி இருக்கிறது. இதற்காக வருவாய் உதவி கமிஷனர் ஆர்.பாஸ்கரன் தலைமையில் ஒன்பது குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் உதவி பொறியாளர் மற்றும் பில் கலெக்டர்களைக்கொண்டு இயங்கும். ஒவ்வொரு குழுவிற்கும் இரண்டு வார்டுகள் ஒதுக்கப் பட்டுள்ளன. தினமும் இவர்கள், கட்டடங்கள் வாரியாக சென்று வரி வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகராட்சி எல்லைக்குள் மொத்தம் 100 அரசு கட்டடங்களிடம் இருந்து வரி வசூலிப்பது, மாநகராட்சிக்கு பெரிய சவாலாக இருந்தது. இதற்காக நேற்று முன் தினம், இந்த அரசு துறைகளின் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களின் கூட்டம் நடந்தது. இதில் 40 அரசு துறைகளை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, பொதுப்பணித் துறை, சிட்கோ உள்பட சில துறைகளின் பிரச்னைகளை தீர்க்க தனி அலுவலர்களை நியமிக்க மாநகராட்சி முடிவு செய்தது. வரி செலுத்தாத அரசு துறைகளுக்கு, ஏற்கனவே மாநகராட்சி ஜப்தி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. தற்போது, ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாத அரசு துறைகளுக்கு மீண்டும் ஜப்தி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.