தினகரன் 26.10.2010
அரசு நிதி ஒதுக்காததால் கொசு மருந்து அடிப்பதை நிறுத்தியது மாநகராட்சி
புதுடெல்லி, அக். 26: மாநில அரசு நிதி ஒதுக்காததால் கொசு மருந்து அடிக்கும் பணியை டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் மாநகராட்சி நிறுத்தியுள்ளது. அதனால், டெங்கு காய்ச்சல் மீண்டும் தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் 77பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களையும் சேர்த்து, டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,140ஆக உயர்ந்தது.
காமன்வெல்த் போட்டிக்காக ஏராளமான வெளிநாட்டு ரசிகர்கள் டெல்லிக்கு வருவார்கள் என்பதற்காக கொசு மருந்து அடிக்கும் பணியை முடுக்கி விடும்படி மாநகராட்சிக்கு சில மாதங்களுக்கு முன் மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. கொசு மருந்து அடிக்க ரூ79 கோடியை வழங்கும்படி மாநகராட்சி கேட்டது. அரசும் உடனடியாக
ரூ27 கோடியை ஒதுக்கியது. அந்த நிதியைக் கொண்டு மாநகராட்சியும் மருந்து அடிக்கும் பணியை வேகவேகமாக செய்தது.
இப்போது, காமன்வெல்த் போட்டியும் முடிந்துவிட்டது. அதற்கு மேல் அரசும் நிதி ஒதுக்காததால், கொசு மருந்து அடிக்கும் பணியையும் மாநகராட்சி முடித்துக் கொண்டது.
இதை மாநகராட்சி மருத்துவக்குழு தலைவர் வி.கே.மோங்கா ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பெரும்பாலான இடங்களில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. போட்டிக்கு முன்னதாக அரசு ஒதுக்கிய நிதியை போட்டி ஏற்பாடுகளுக்காக செலவிடப்பட்டு விட்டது. மீண்டும் அரசு நிதியை ஒதுக்கினால்தான், கொசு மருந்து அடிக்கும் பணியை தொடங்க முடியும். விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இதுநாள் வரையில் ஒரு பைசாகூட வரவில்லை” என்றார்.
மோங்காவின் குற்றச்சாட்டுக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கிரண் வாலியா பதிலளிக்கையில், “இந்த விவகாரத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். மாநகராட்சி அதிகாரிகளுடனும் அவசர கூட்டம் நடத்தினோம். டெல்லிவாசிகளை ஒருபோதும் பாதிப்புக்கு ஆளாக விட மாட்டோம். டெங்குவை கட்டுப்படுத்தும் பணிக்காக ஏற்கனவே மாநகராட்சி செலவிட்ட தொகை பற்றிய கணக்கு விவரங்களை சரிபார்த்தபிறகு நிதி ஒதுக்கப்படும்” என்றார்.
மாநகராட்சி & மாநில அரசு இடையேயான பிரச்னையில் கொசு மருந்து அடிக்கும் பணி முடங்கிப்போயுள்ளது. வீடுவீடாக சென்று கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி நிற்கிறதா என்று சோதனையிடும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் 3 மாதமாக சம்பளம் கொடுக்கப்படாததால் அந்தப் பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி டெங்கு தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.