தினமலர் 08.01.201
அரசு பள்ளி மாணவியரின் அவஸ்தைக்கு தீர்வு: எளிய முறையில் ‘நாப்கின்‘ தயாரிக்க பயிற்சி
கோவை : மாதவிடாய் நாட்களில் பள்ளி மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுகிறது; பலரும் வகுப்புக்கு வருவதை தவிர்த்து விடுகின்றனர். இதனால், சில தனியார் மெட்ரிக் பள்ளிகளில் போதுமான கழிப்பறைகள், “நாப்கின்‘ வழங்கும் மெஷின் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு சில மாநகராட்சி பள்ளிகளில் மட்டும் தற்போது “நாப்கின் வெண்டிங் மெஷின்கள்‘ வைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், கிராமப்புறங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. கழிப்பறை இருந்தாலும் தண்ணீர் வசதி இருப்பதில்லை. கழிப்பறைகளில் போதுமான மறைவு இல்லாமல் இருப்பதால் மாணவியர் சிரமப்படுகின்றனர். இதனால், அரசு பள்ளி மாணவியர் அவஸ்தைக்கு உள்ளாகி வருகின்றனர். தண்ணீர் வசதி இல்லாததாலும், பயன்படுத்திய நாப்கின்களை சுகாதாரமான முறையில் அகற்ற முடியாததாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக, மாணவியரில் பலரும் மாதவிடாய் நாட்களில் பள்ளிக்கு வருவதை தவிர்ப்பதால் படிப்பு பாதிக்கப்படுகிறது.
தனியார் பள்ளிகளைப் போல் அரசுப் பள்ளிகளிலும் குறைந்த கட்டணத்தில் “நாப்கின்‘ வழங்கும் மெஷின்களை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சுகாதாரமான முறையில் “நாப்கின்‘களை பயன்படுத்துவது பற்றி சமுதாயத்தில் பின்தங்கிய ஏழை மாணவியருக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எளிய முறையில் “நாப்கின்‘களை தயாரித்து பயன்படுத்தவும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பஞ்சு மற்றும் சுத்தமான காட்டன் துணிகளை பயன்படுத்தி பள்ளி நாட்களில் எளிய, சுகாதாரமான முறையில் தீர்வு காண்பது பற்றி இப்பயிற்சியில் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, சமீபத்தில் சென்னையில் மாநில அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர். ஆசிரியர் பயிற்றுனர்கள் வாயிலாக பயிற்சி பெறவுள்ள பள்ளி ஆசிரியர்கள், மாணவியருக்கு இது பற்றி பயிற்சி அளிக்கவுள்ளனர். இப்பயிற்சி, அரசுப் பள்ளி மாணவியர் அனுபவித்து வரும் சுகாதாரப் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.