தினமலர் 19.11.2013
அரசு பொது மருத்துவமனையில் ‘அம்மா’ உணவகம் நாளை திறப்பு
சென்னை:சென்னை அரசு பொது மருத்துவமனையில், 6,000 சதுர அடியில் அமைந்துள்ள, ‘அம்மா’ உணவகம், நாளை திறக்கப்படுகிறது. மற்ற மருத்துவமனைகளில் பணிகள் முடியாததால், திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், 200 வார்டுகளில், மலிவு விலை உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில், 3 ரூபாய்க்கு இரண்டு சப்பாத்தி தரும் திட்டம், நாளை துவக்கப்பட உள்ளது. ரூ.2 க்கு டீ இந்த நிலையில், சென்னை அரசு பொது மருத்துவமனையில், 6,000 சதுர அடியில் அமைக்கப்பட்டு உள்ள பிரமாண்டமான மலிவு விலை உணவகமும், நாளை திறக்கப்பட உள்ளது.
அதில், ஒரே நேரத்தில், 400 பேர் சாப்பிடலாம். மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரத்யேக வசதி செய்யப்பட்டு உள்ளது. இங்கு, 2 ரூபாய்க்கு டீ வழங்கவும், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்துாரிபாய் மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனைகளில், உணவகப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் அவை திறக்கப்படும்’ என்றனர்.
சோதனை ஓட்டம் தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள மலிவு விலை உணவகத்தில், நேற்று, சப்பாத்தி தயாரிப்பு சோதனை ஓட்டம் நடந்தது. அதற்கான இயந்திரம் மூலம், ஒரு மணி நேரத்திற்கு, 3,000 சப்பாத்திகள் தயாரிக்கப்பட்டன. இவை, மண்டலத்தில் உள்ள, 18 மலிவு விலை உணவகங்களுக்கு வழங்கப்பட்டது.