தினமணி 05.08.2010
அரசு மணல் குவாரியால் பாதிக்கப்படும் குடிநீர்த் திட்டங்கள்
வைகை ஆற்றில் மணல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தேனி குடிநீர்த் திட்ட பிரதானக் குழாய்.
தேனி: தேனி மாவட்டத்தில் அரசு மணல் குவாரியில் வைகை ஆற்றில் நீர்வரத்து இருக்கும் இடங்களில், அத்துமீறி மணல் அள்ளப்படுவதால், குடிநீர்த் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி ஜேசிபி இயந்திரம் மூலம், ஆற்றில் ஆழமாகச் சுரண்டப்படும் மணல், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பதுக்கப்பட்டு கேரளத்துக்கு கடத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் பகுதி வைகை ஆற்று படுகையில் அமைக்கப்பட்டிருந்த அரசு மணல் குவாரியை தடை செய்து, நீதிமன்றம் ஏற்கெனவே ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், வைகை அணையை ஓட்டியுள்ள வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் தற்போது மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி மாவட்ட கனிம வளத்துறை மூலம் உரிமம் பெற்று பின்னத்தேவன்பட்டி, சொக்கத்தேவன்பட்டி பகுதியில் ஆற்றில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.
அரசு மணல் குவாரி செயல்பட்டுவரும் பகுதிக்கு அருகே ஒரு கி.மீ., தூரத்தில் குன்னூர், அரப்படித்தேவன்பட்டி பகுதி வைகை ஆற்றில் தேனி நகராட்சி, ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளுக்கான குடிநீர்த் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த குடிநீர்த் திட்டங்களுக்காக ஆற்றில் உறைகிணறுகள் மற்றும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்ட பிரதான குழாய்கள் உறுதியான அடித்தள கட்டமைப்பு இல்லாமல், மணல் படுகைக்கு மேல்புறம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போதும், மணல் அரிப்பினாலும் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு, தாற்காலிக நடவடிக்கையாக நகராட்சி நிர்வாகம் சார்பில் குழாய்களை ஒட்டி மணல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தற்போது ஆற்றில் இருந்து அணைக்கு நீர் வரத்து உள்ள நிலையில், குவாரிகளில், விதிமுறைகளை மீறி ஜேசிபி இயந்திரத்தைப் பயன்படுத்தி, ஆற்றில் மணல் அள்ளி கரையில் குவிக்கப்படுகிறது. நீர்வரத்து உள்ள இடங்கள் பல மீட்டர் ஆழத்திற்கு பள்ளமாக்கப்படுவதால், இதன் மேல்புறம் குடிநீர்த் திட்டங்கள் அமைந்துள்ள பகுதியில் பெருமளவில் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உறைகிணறுகள் சரிந்து விழும் நிலையில் உள்ளன.
குன்னூர் வைகை ஆற்றின் குறுக்கே தேனி நகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் பிரதான குழாயில் தண்ணீர் பம்பிங் செய்யப்படும்போது, மணல் அரிப்பால் அடித்தள பிடிமானமின்றி நீர் அழுத்தம் தாங்காமல் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பிரதானக் குழாய் முழுமையாக மண்ணில் மூழ்கி பராமரிக்க முடியாமல் வீணாகும் நிலை உள்ளது. அரசு மணல் குவாரியில் அத்துமீறல்: பலவித நிபந்தனைகளின் அடிப்படையில் மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்குகிறது. குவாரியில் மணல் அள்ளும் உரிமம் பெற்றோர், ஜே.சி.பி. இயந்திரத்தைப் பயன்படுத்தி, ஆற்றில் நீர்வரத்து இருக்கும் பகுதியில் மணலை அள்ளி கரையில் மலைபோலக் குவிக்கின்றனர்.
கனிம வளம் மற்றும் வருவாய்த் துறையினர், இந்த மணல் குவியலை அளவீடு செய்து முறையாகப் பதிவு செய்வதில்லையாம். இதுபற்றி பொதுப்பணித்துறை பெரியாறு நீர்வடிக் கோட்ட நிர்வாகப் பொறியாளர் விஜயகுமார் கூறுகையில், அரசு மணல் குவாரியில் விதிமீறல்கள் நடந்துவருவது குறித்து நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மணல் குவாரியால் குடிநீர்த் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுவது குறித்து, மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் ரமேஷிடம் கேட்டதற்கு, குவாரியை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக அதே பதிலை தெரிவிக்கிறார். இந்நிலையில், மாவட்டத்தின் கனிம வளம், நிலத்தடி நீர்மட்டம், குடிநீர் ஆதாரங்களைப் பாதுகாக்க அனுமதியில்லாத இடங்களில் ஆற்றில் மணல் திருட்டு நடப்பதைத் தடுக்கவும், அரசு மணல் குவாரி முறைகேடுகளைத் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.