தினமலர் 30.04.2010
அரசு மருத்துவக்கல்லூரி புதிய கட்டடத்திற்கு செல்லும் மெயின் கேட் பகுதியை அடைக்க மாநகராட்சி முடிவு!
தூத்துக்குடி : தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் புதிய கட்டடபகுதிக்கு செல்லும் பாதையை மாநகராட்சி நிர்வாகத்தினர் அடைப்பதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆஸ்பத்திரி நிர்வாகமும், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி என்ற தர உயர்வு காரணமாக பல்வேறு புதிய பணியிடங்களும், பல அதிநவீன சிகிச்சை வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டது. இதுதவிர மருத்துவக்கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு இந்த ஆஸ்பத்திரி பயிற்சி கூடமாக மாறியது. இதனால் பழைய கட்டட பகுதியில் பெரும் இடநெருக்கடி ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் நோக்கத்துடன் பழைய கட்டடத்தின் முன்பகுதியில் உள்ள காலி இடத்தில் புதிய கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. சுமார் 17 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கைகள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டது, கடந்தாண்டு துணை முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் புதிய கட்டட வளாகம் செயல்படாமல் இருந்து பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
கடந்தமாதம் மருத்துவக்கல்வி இயக்குனர், தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். ஆய்வின்படி படிப்படியாக பழைய கட்டடத்தில் இருந்து புதிய வளாகத்திற்கு ஆஸ்பத்திரி சிப்ட் செய்யபடும் என்றும், மே மாதம் 15ம் தேதி முதல் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என்றும் கூறப்பட்டது. இதன்படி கடந்த சிலநாட்களுக்கு முன்பிலிருந்து சில நோய் பிரிவுகளுக்கான ஓ.பி., புதிய வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. 17 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய வளாகத்திற்கு முக்கிய நுழைவு வாயில் குறித்து ஆரம்பத்தில் இருந்தே சிக்கல் இருந்து வந்தது. தற்போது வரையிலும் பாளையங்கோட்டை மெயின்ரோட்டில் விவிடி., சிக்னல் அருகில் இருந்து மாநகராட்சிக்கு சொந்தமான பாதை வழியாக மெயின் நுழைவு வாயில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிக்கு நிரந்தர பாதை அமைக்கும் நோக்கத்துடன் ராஜாஜி பூங்காவின் அருகில் உள்ள காலி இடமும், அதனை ஒட்டியுள்ள பழைய கட்டடத்தையும் வழங்குவது என்று மாநகராட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதற்காகவே ராஜாஜி பூங்காவை சீரமைக்கும் பொழுது, ஆஸ்பத்திரியின் பாதைக்கு தேவையான இடத்தை விட்டு விட்டு, மற்ற பகுதிகளில் பூங்கா அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அருகில் உள்ள பழைய கட்டடமும் பயன்பாட்டிற்கு தகுதியில்லை என்றும், அதனை இடித்துவிடலாம் என்று பொதுப்பணித்துறையினரும் சான்று அளித்துள்ளனர். ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரும் விரைவில் புதிய நுழைவு வாயில் அமைக்கப்படும் என்று எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் நேற்று மாநகராட்சி சார்பில் ஆஸ்பத்திரி புதிய கட்டட வளாகத்தின் முன்புறமுள்ள தங்களுக்கு சொந்தமான பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க அஸ்திவாரம் தோண்ட ஆரம்பித்துள்ளனர்.
இது தவிர கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் சார்பில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்படும் என்றும், ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் வேறு பாதைக்கான வழியை தேர்வு செய்து கொள்ளும்படி வாய்மொழியாக கூறியதாகவும் கூறப்படுகிறது. பலகோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கட்டடத்திற்கு பெரிய நுழைவு இல்லாமல் போய்விடுமோ என்று ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் நிர்வாகம் இதற்கு விரைவில் நல்ல தீர்வு ஏற்பட வழி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.