அரசு மருத்துவமனையில் மாநகராட்சி குடிநீர் கேன்டீனில் நோயாளிகளுக்கு விற்பனை எம்எல்ஏ, டீன் ஆய்வு
மதுரை: மாநகராட்சி குடிநீரை மதுரை அரசு மருத்துவமனை கேன்டீன் மூலம் நோயாளிகளுக்கு விற்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் எம்எல்ஏ, டீன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
மதுரை அரசு மருத்துவமனைக்குள் கண்வங்கி அருகே தனியார் கேன்டீன் உள்ளது. இங்கு, மாநகராட்சி குடிநீர் நோயாளிகளுக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக எம்எல்ஏ அண்ணாதுரைக்கு கடிதம் மூலம் புகார் வந்தது. இதன்பேரில் நேற்று காலை டீன் மோகன், நிலைய மருத்துவ அதிகாரி பிரகதீஸ்வரன், மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் நரசிம்மன், ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கேன்டீனுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முறைகேடுகளை கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தனர்.
அண்ணாதுரை எம்எல்ஏ, கூறுகையில், மருத்துவமனைக்குள் உள்ள குடிநீர் குழாயுடன் இணைப்பு வைத்து 24 மணிநேரமும் குடிநீர் எடுக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் இருக்க பெயரளவில் மாநகராட்சியிடம் தனி குடிநீர் இணைப்பு பெற்று வைத்து ஏமாற்றியுள்ளனர். அரசு மருத்துவமனைக்குள் தனியாருக்கு குடிநீர் இணைப்பை மாநகராட்சி வழங்கியது ஆச்சர்யமாக உள்ளது. பல ஆயிரம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டுள்ளது. எனவே எடுக்கப்பட்ட குடிநீரில் நோயாளிகளுக்கு விற்கப்பட்டது, எந்த விற்பனை க்காக கேன்டீன் அனுமதி பெறப்பட்டது, பிற பொருட்கள் விற்கப்படுகிறதாதா என்பது உள்ளிட்ட பல்வேறு விசாரணைகளுக்கு உத்தரவிடுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றார்.