தினமணி 06.08.2010
அரியலூர் நகராட்சிப் பகுதியில் விளம்பரத் தட்டிகள் நிறுவ கட்டுப்பாடுகள்
அரியலூர், ஆக. 5: அரியலூர் நகராட்சிப் பகுதியில் விளம்பரத் தட்டிகள் நிறுவ கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரியலூர் நகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பதாகைகள்– பலகைகள்– தட்டிகளை தாற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நிறுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவது அவசியம். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் விளம்பரங்களை நிறுவ வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்கும் இடத்தில்தான் விளம்பரத் தட்டிகளை நிறுவ வேண்டும். மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி நிறுவப்படும் விளம்பரங்கள் முன்னறிவிப்பின்றி உடனடியாக அகற்றப்படும். நகர்ப் பகுதியில் அதிகபட்சமாக 10-க்கு 15 அடி என்ற அளவில் மட்டுமே விளம்பரத் தட்டிகளை நிறுவ வேண்டும்.
தாற்காலிகமாக விளம்பரம் செய்ய சதுர மீட்டர்க்கு ரூ. 50 வசூலிக்கப்படும். இந்தத் தொகையை நகராட்சி அலுவலகத்தில் செலுத்திய பிறகே, விளம்பரத்தை நிறுவ வேண்டும். அரசியல் கட்சிகளின் விளம்பரத் தட்டிகள் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக நிறுவிக் கொள்ளலாம்.
நிகழ்ச்சிகள் முடிந்த இரண்டு நாள்கள் வரைக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அதன் பின்னர் உரிமையாளரே அதை அகற்றிக் கொள்ள வேண்டும். விளம்பரத் தட்டிகள் நிறுவ அனுமதி கோரும் அனைவரும் இந்த விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.