அரியலூர் நகராட்சிப் பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடிவு
அரியலூர் நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சாதாரணக் கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகள் மேற்கொள்ள 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரியலூர் நகராட்சி கூட்ட மன்றத்தில், நடைபெற்ற கூட்டத்துதுக்கு தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். ஆணையர் சரஸ்வதி, நகராட்சி பொறியாளர் (பொறுப்பு) கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தர் பாலசந்தர் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில், கோடை காலத்தில் அரியலூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கை பம்பு அமைத்தல்,
வாடகை லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்தல், பழுதான கைபம்புகள் பராமரித்தல். தலைமை நீரேற்று நிலையத்தில் பழுதடைந்துள்ள மின் மோட்டார்களுக்கு பதிலாக புதிய மின் மோட்டார்கள் மற்றும் புதிதாக ஜெனரேட்டர் அமைக்க ரூ.1 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வது. திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள நீர் சேகரிப்பு கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறையை சீரமைக்க 2 ஆழ்துளை கிணறுகள் ரூ. 5 லட்சம் மதிப்பில் அமைப்பது. அரியலூர் நகராட்சி 5-வது வார்டு கே.கே.காலனியில் ரூ. 2 லட்சத்தில் தரைப்பாலம் அமைப்பது, அரியலூர் நகராட்சியில் திறந்தவெளி கழிவறைகளை தவிர்க்க இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவறைகள் அமைப்பது உள்ளிட்ட 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் குணா, மாலா தமிழரசன், சிட்டிபாபு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.