தினமலர் 17.03.2010
அரைகுறை கட்டட பணிகள்; கான்ட்ராக்டருக்கு அபராதம்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் அரைகுறையாக நிற்கும் கட்டட பணிகளால், கான்ட்ராக்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ராமேஸ்வரம் நகராட்சி பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பஸ் ஸ்டாண்ட் சிறுவர் பூங்காவை மேம்படுத்த 10 லட்சம், எம்.கே.நகரில் சமுதாயகூடம் கட்ட 15 லட்சம், சந்தனமாரியம்மன் கோயில் தெரு மற்றும் மல்லிகை நகரில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட 10 லட்சம் ரூபாயில் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்தன. அனைத்து பணிகளும் கடந்த ஆண்டிலேயே முடித்து உபயோகத்திற்கு வந்திருக்க வேண்டிய நிலையில், தற்போது அரைகுறை வேலைகளுடன் நிற்கின்றன. இதனால், குடிநீரை சீராக வழங்க முடியாத நிலை உள்ளது. காலம் கடந்தும் பணிகள் முடிக்கப்படாததால், நகராட்சியின் மேம்பாட்டுப்பணிகளுக்கு வரவேண்டிய மத்திய, மாநில அரசுகளின் நிதியை பெறுவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.நகராட்சி கமிஷனர் போஸ் கூறியதாவது: அனைத்துப்பணிகளும் 2009 ஆகஸ்ட் 31 க்குள் முடிந்திருக்க வேண்டும். பணிகள் முடிக்கப்படாததால், கான்ட்ராக்டர் முனியசாமி பாண்டியனுக்கு நோட்டீஸ் வழங்கப் பட்டு,அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பணிகளை விரைந்துமுடிக்காத பட்சத்தில் காண்ட்ராக்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.