தினமணி 20.08.2013
பெரியநாயக்கன்பாளையத்தையடுத்த எண்.4 வீரபாண்டி
பேரூராட்சி, அறிவொளி நகருக்கு குடிநீர் விநியோகிப்பதற்கான தொடக்க விழா
திங்கள்கிழமை நடைபெற்றது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவை,
வடகோவைப் பகுதியில் ரயில்வே பாதையோரத்தில் குடியிருந்தவர்களை மாவட்ட
நிர்வாகம் அங்கிருந்து அகற்றி எண்.4 வீரபாண்டி பேரூராட்சி பகுதி, அறிவொளி
நகரில் குடியமர்த்தியது. 3 மற்றும் 4-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியான இங்கு
முதலில் அவர்கள் தங்க மறுத்தனர். பின்னர் மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது
பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தந்ததையடுத்து தற்போது அங்கேயே
வசிக்கின்றனர். அதிக மக்கள் பெருக்கம் காரணமாக இங்கு குடிநீர் தட்டுப்பாடு
நிலவியது. இதனை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதையடுத்து பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ.8.40 லட்சம் செலவில்
எம்.ஜி.ஆர்.நகரிலிருந்து ஆழ்குழாய்க் கிணற்று நீரை விநியோகிக்க
திட்டமிடப்பட்டது. தொடர்ந்து குடிநீர்க் குழாய் விஸ்தரிப்புப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டது.
அப்பணி நிறைவடைந்ததையொட்டி குடிநீர் விநியோகம்
செய்வதற்காக நடந்த தொடக்க விழாவிற்கு செயல் அலுவலர் முருகேசன் முன்னிலை
வகித்தார். வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் கே.வி.என்.ஜெயராமன்,
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர்
தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மேட்டுப்பாளையம்
தொகுதி எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ் குடிநீர் விநியோகத்தைத் தொடங்கி
வைத்தார். விழாவில் கவுன்சிலர்கள் ஆனந்தன், சிக்கந்தர், பாலாமணி, சரோஜா,
விஜயகுமார், குப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இளநிலை எழுத்தர்
நம்மாழ்வார் நன்றி கூறினார்.