தினமலர் 06.06.2012
அவசர சட்டம் வந்தாலும் தி.நகர் கடைகளை காப்பாற்ற முடியாது
சென்னை: தி.நகரில் சீல் வைப்பு நடவடிக்கைக்கு ஆளான விதிமீறல் வணிக
வளாகங்களில் பெரும்பாலானவை, நீதிபதி மோகன் குழு பரிந்துரை அடிப்படையில்
வரன்முறை செய்யத் தகுதி பெறவில்லை என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், அண்மையில்
நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
விதிமீறல் கட்டடங்கள்
பிரச்னைக்குத் தீர்வுகாண, நீதிபதி மோகன் குழு பரிந்துரைகள் அடிப்படையில்,
நகர், ஊரமைப்புச் சட்டத்தில், திருத்தங்கள் செய்ய தமிழக அரசு முடிவெடுத்து
உள்ளது.
இதற்கு, ஆறு மாத கால அவகாசம் தேவை என, தமிழக அரசு
ஐகோர்ட்டில் தெரிவித்தது. ஆனால், ஆறு மாதம் வரை காத்திருக்காமல், அடுத்த
ஆறு வாரங்களுக்குள் அதாவது ஜூலை 24ம் தேதிக்குள் அவசர சட்டம் மூலம்,
நகரமைப்புச் சட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஐகோர்ட் தமிழக
அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.
இதன்படி, நகரமைப்புச் சட்டத்தில்
கட்டட விதி மீறல்கள் தொடர்பாக, 113சி என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட
உள்ளது. இந்தப் பிரிவின்படி, ஜூலை 1, 2007 க்கு முன் கட்டப்பட்ட கட்டடங்கள்
அனைத்தும் குறிப்பிட்ட சில தகுதிகளின் அடிப்படையில் வரன்முறை செய்யப்பட
உள்ளன.
நோக்கம் என்ன?இது தொடர்பாக நகரமைப்பு வல்லுனர்கள்
கூறியதாவது:ஒவ்வொருவரும், தங்களுக்குள்ள நிலத்தில், அடுத்தவருக்கும், அதை
பயன்படுத்துவோருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டடம் கட்ட
வேண்டும் என்ற ஒழுங்கை நிலைநாட்டவே நகரமைப்புச் சட்டத்தில் விதிமுறைகள்
வகுக்கப்பட்டு உள்ளன.இந்த விதிகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறி, எவ்வித
பாதுகாப்பும் இல்லாதவகையில் கட்டப்பட்டதாலேயே தி.நகரில் உள்ள அடுக்குமாடி
வணிக வளாகங்களை சீல் வைக்க ஐகோர்ட் அமைத்த கண்காணிப்புக் குழு
உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டிய அரசு, இக்
கட்டடங்களைப் பாதுகாக்கும் வகையில் வரன்முறை திட்டத்தை செயல்படுத்த
முன்வந்து உள்ளது. இது விதிகளை மீறி கட்டடம் கட்டுவோரை மறைமுகமாக
ஊக்குவிப்பதாக அமைந்து உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நிபந்தனைகள்தமிழக
அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டப்பிரிவு
113-சி,யின் கீழ், வரன் முறை செய்யத் தகுதியாக கூறப்பட்டுள்ள நிபந்தனைகள்
அடிப்படையில், தி. நகரில் சீல் வைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட வணிக
வளாகங்களின் நிலை குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆய்வுசெய்து
வருகின்றனர்.
முதல்கட்டமாக, இதில் தெரிய வந்த விவரங்கள் குறித்து
சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:உத்தேச புதிய விதிமுறைகளின்
படி, 1.5 அளவுக்கு தளப் பரப்பு குறியீடு அனுமதிக்கப்படும் இடத்தில் 50
சதவீதம் வரை கூடுதலாக கட்டப்பட்ட கட்டடங்கள் வரன்முறை செய்யப்படும்.
கட்டடங்கள் விதிகளை மீறி தளப் பரப்பு குறியீடு 8 முதல் 10 வரை கட்டடங்கள்
கட்டப்பட்டுள்ளன.
வெளிச்சம், காற்றோட்டம் ஏற்படுத்த போதிய நடவடிக்கை
எடுத்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை, உள்ளாட்சி அமைப்பிடம் இருந்து
பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
ரங்கநாதன் தெருவில் பெரும்பாலான வணிக வளாகங்கள் இதுவரை கட்டட அனுமதிகோரி விண்ணப்பிக்கவேயில்லை.
தீ தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள்,
தீயணைப்பு இயக்குனரகத்தின் விதிப்படி இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழைப்
பெற வேண்டும். ரங்கநாதன் தெருவில், 90 சதவீத கட்டடங்களில் உரியமுறையில்
தீ தடுப்பு வசதிகள் அமைக்கவில்லை என, தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
வளர்ச்சி
கட்டுப்பாட்டு விதிகளில் நிர்ணயித்துள்ளபடி, வளாகத்துக்குள் வாகன
நிறுத்தும் வசதி அமைத்து இருக்க வேண்டும். அல்லது அந்த கட்டடத்தில்
இருந்து, 250 மீ., தூரத்துக்குள் இருக்க வேண்டும். வாகன நிறுத்தும் இடம்
சொந்தமானதாகவோ அல்லது 30 ஆண்டுகளுக்கு குறையாமல் குத்தகையாகவோ இருக்க
வேண்டும்.
ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலையில் பெரும்பாலான வணிக
வளாகங்களில், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மிகவும் குறைவான அளவிலேயே வாகன
நிறுத்துமிட வசதிகள் உள்ளன என்று 2007 சி.எம்.டி.ஏ., அதிகாரிகளின்
ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில், தி. நகர் கடைகள்
வரன்முறை திட்டத்தில் எந்த அளவுக்கு தகுதி பெறும் என்பது குறித்து அரசு
இறுதி முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.