தினமலர் 18.01.2010
அவனியாபுரம் குப்பை மேடுகளை அகற்ற மாநகராட்சியுடன் ஒப்பந்தம்
அவனியாபுரம் : அவனியாபுரம் நகராட்சி குப்பைகளை, வெள்ளக்கல்லில் கொட்டும் பணி, பொங்கல் நாளன்று துவங்கியது.
நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இவற்றை சுத்தம் செய்யும் பணியை நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் செய்கின்றன. தினமும் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லை. தெருக்களின் கடைசிவரை செல்லாமல், ஏதாவது ஒரு இடத்தில் குப்பைவண்டிகள் நிறுத்தப்படுகின்றன. வண்டி நிற்கும் இடத்திற்கு சென்று வீட்டு குப்பைகளை கொட்டவேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு சேகரிக்கும் குப்பைகள், மெயின் ரோட்டில் ஆங்காங்கே கொட்டப்படுவதால் செயற்கையாக குப்பைமேடுகள் உருவாகின்றன.
பிரச்னைகள் வரும்போது மட்டும் குப்பைமேடுகள் சில நாட்களில் காணாமல்போகும். இக்குப்பைகளை லாரி மூலம் வில்லாபுரம் ஹவுசிங்போர்டிலிருந்து முத்துப்பட்டி செல்லும் ரோடு, அவனியாபுரம் சுடுகாடு அருகே, பெரியார்சிலை பின்புறம் என கொட்டி தீ வைக்கின்றனர். திடீர்குப்பை மேடுகள், சுத்தம் செய்யப்படாத சாக்கடைகளால் கொசு உற்பத்தி அதிகமாகி, தெருவிற்கு குறைந்தது ஐந்து பேருக்கு காய்ச்சல் ஏற்படுகிறது.
காய்ச்சல் ஏற்பட்டால் சிகிச்சை எடுத்துக்கொள்ள அவனியாபுரத்தில் அரசு ஆஸ்பத்திரி வசதியும் இல்லை. வெள்ளக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கை உபயோகிக்க அனுமதிகோரி அவனியாபுரம் நகராட்சியில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடவடிக்கை இல்லை. தற்போது அது உயிர்பெற்றுள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகளிடையே நடந்த பேச்சுவார்த்தையின் படி, ஒப்பந்தம் உருவாகியுள்ளது. அதன்படி ஆண்டிற்கு இரண்டரை லட்சம் ரூபாயை, மதுரை மாநகராட்சிக்கு அவனியாபுரம் நகராட்சி செலுத்தி, குப்பைகளை கொட்டிக் கொள்ளலாம் என முடிவானது.
பொங்கலன்று நகராட்சி தலைவர் போஸ்முத்தையா, நிர்வாக அதிகாரி ஞானசேகரன், சுகாதார அதிகாரி ஜெயசந்திரன் மேற்பார்வையில் குப்பைகளை வெள்ளக் கல்லில் கொட்டும் பணி துவங்கியது.