தினமலர் 29.04.2010
ஆக்கிரமிக்கப்பட்ட வாய்க்கால் மீட்பு
தேனி,: தேனியில், ‘பிளாட்‘ போடுவதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட வாய்க்கால் முழுமையாக மீட்கப் பட்டது. தேனியில் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சடையாள்கோயில் உள்ளது. இந்த கோயிலின் முன்பகுதியில் பொதுப்பணித் துறை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலுக்கு கொட்டகுடி ஆற்றில் இருந்து தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் 140 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.தற்போது இப்பகுதியில் நிலம் வாங்கி ‘பிளாட்‘ அமைக்கும் பணியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பொதுப் பணித்துறை வாய்க்காலை மூடி ஆக்கிரமித்து பாதை ஏற்படுத்தி வந்தனர்.தண்ணீர் செல்வதற்கு மட்டும் பெயரளவில் பைப் பதித்து விட்டு, மற்ற இடங்களை மேவினர். இது பற்றி கலெக்டர் முத்துவீரனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ‘வாய்க்காலை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு பழைய நிலையில் வைக்க நகராட்சி கமிஷனருக்கும், தேனி தாசில்தாருக்கும் கலெக்டர் உத்தரவிட்டார்.இதையடுத்து வாய்க் கால் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப் பட் டது.