தினமலர் 01.10.2010
ஆக்கிரமிப்பு அகற்றம்: நடைபாதை பணி துவக்கம்கோத்தகிரி:கோத்தகிரி மார்க்கெட் சாலையோரம், நடைபாதை அமைக்கும் பணி, நேற்று துவக்கப்பட்டது.
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் ஸ்டாண்டில் இருந்து மார்க்கெட் செல்லும் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்பு, சில மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில், பேரூராட்சி பொது நிதியான 10 லட்சத்தில் சாலை, நடைபாதை அமைக்கப்பட்டது; பணிகள் பாதியின் விடப்பட்டன.பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என,கோத்தகிரியில் செயல்படும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பேரூராட்சித் தலைவர் போஜன், துணைத் தலைவர் செந்தில் ரங்கராஜ், தலைமை எழுத்தர் நடராஜ் முன்னிலையில், நேற்று, பணிகள் நடத்தப்பட்டன. சாலையோரம் எஞ்சியிருந்த ஆக்கிரமிப்பு படிகட்டுகள், ஜேசிபி., வாகனத்துடன் அகற்றப்பட்டு, உடனுக்குடன் நடைபாதை அமைக்க, தளம் சமன்படுத்தப்பட்டது.
பணிகள் முடிந்தால், சாலையின் அகலம் அதிகரிக்கப்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.