தினமலர் 03.02.2010
ஆக்கிரமிப்பு அகற்றம்! பொள்ளாச்சி கவுன்சிலர்கள் ‘சிக்னல்‘ : நகராட்சி அதிகாரிகள் அதிரடி ‘சர்வே‘
பொள்ளாச்சி : பொள்ளாச்சி திரு.வி.க., மார்க்கெட் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் “சர்வே‘ செய்யும் பணியை நிறைவு செய்துள்ளனர். கவுன்சிலர்கள் “சிக்னல்‘ கொடுத்ததால் சிக்கல் இல்லாமல் பிரச்னை முடிகிறது.
பொள்ளாச்சியில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டதையடுத்து போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. மேலும், இரண்டு பஸ் ஸ்டாண்டையும் இணைக்க சுரங்க நடைபாதை அமைக்கும் பணிநடக்கிறது. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பழைய பஸ் ஸ்டாண்டில் பின்பக்கம் “டூ–வீலர் பார்க்கிங்‘ ஸ்டாண்ட் அகற்றி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்க நடைபாதை பணி நிறைவடைந்ததும், சென்டர் மீடியன் அமைக்கப்படுகிறது. அப்போது, பழைய பஸ் ஸ்டாண்ட் பின்பக்கமுள்ள திரு.வி.க., மார்க்கெட் ரோடு போக்குவரத்துக்கு பயன்படுத்தவுள்ளதால், அந்த ரோட்டில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பஸ் ஸ்டாண்டில் இருந்து அகற்றப்பட்ட டூ–வீலர் பார்க்கிங் ஸ்டாண்டை, திரு.வி.க., மார்க்கெட்டில் பின்பகுதியில் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். மார்க்கெட்டில் நகராட்சி சார்பில் கடைகள் கட்டிக்கொடுத்து ஒழுங்குபடுத்தாத நிலையில் பார்க்கிங் ஸ்டாண்ட் வருவதற்கு மார்க்கெட் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கவுன்சிலர் “சிக்னல்‘: இப் பிரச்னை நகராட்சி கூட்டத்தில் எதிரொலித்தது அப்போது, கவுன்சிலர்கள் தலையீடு இல்லாவிட்டால் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தப்படும்‘ என அதிகாரிகள் அறிவித்தனர். இதற்கு, அரசியல் வேறுபாடு மறந்து கவுன்சிலர்கள் “சிக்னல்‘ காட்டினர். இதையடுத்து, ஆக்கிரமிப்பு “சர்வே‘பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.அதிகாரிகள் கூறியதாவது: பஸ் ஸ்டாண்ட் பின்பகுதியில் இடநெருக்கடியான இடத்தில் திரு.வி.க., மார்க்கெட் மூலம் நகராட்சிக்கு அதிகளவில் வருவாய் இல்லை. எனவே, வெங்கடேசா காலனி உள்ளிட்ட லே–அவுட்களில் ரிசர்வ் சைட்களில் காய்கறி கடைகள் வைத்துக்கொண்டால் மக்களுக்கும் வியாபாரிகளும் பயனுள்ளதாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.இதேபோல், கவுன்சிலர்கள் சார்பில் திரு.வி.க., மார்க்கெட் வியாபாரிகளிடம் பேச்சு நடத்தப் படவுள்ளது. இங்குள்ள 84 சென்ட் இடத்தில் 34 சென்ட்டில் பார்க்கிங் ஸ்டாண்ட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திரு.வி.க., மார்க்கெட் மாற்றம் செய்யப்படும் போது அனைத்து இடத்திலும் “பார்க்கிங் ஸ்டாண்ட்‘ அல்லது முன்பகுதியில் வணிக வளாகமும் பின்பகுதியில் பார்க்கிங் ஸ்டாண்ட்டும் வரும் திட்டமும் உள்ளது.எனவே, முதற்கட்டமாக திரு.வி.க., மார்க்கெட் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சர்வே செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கப்படும். போலீஸ், வருவாய்த்துறையுடன் இணைந்து ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது. இவ்வாறு, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.