தினமலர் 26.04.2010
ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆத்தூர்: ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.சேலம் – உளுந்தூர்பேட்டை வரையிலான நான்கு வழிச்சாலைபணிகள், சேலம் – காட்டுக்கோட்டை, காட்டுக்கோட்டை – உளுந்தூர்பேட்டை என இரண்டு கட்டங்களாக நடந்து வருகின்றன. சேலம் – ஆத்தூர் வழிப்பாதையில் நான்கு வழிச்சாலை பணியையொட்டி சாலையோர மரங்களை அப்புறப்படுத்தி, சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணி நடந்து வருகிறது. சாலை அமைவிடம் வரை உள்ள கட்டிடங்கள், வீடுகள், போன்றவற்றை இடித்து, புதிய தார் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.