தினமணி 29.11.2013
ஆக்கிரமிப்பு அகற்றிய இடங்களில் மீண்டும் கடைகள் அமைக்க எதிர்ப்பு
தினமணி 29.11.2013
ஆக்கிரமிப்பு அகற்றிய இடங்களில் மீண்டும் கடைகள் அமைக்க எதிர்ப்பு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆக்கிரமிப்பு
அகற்றப்பட்ட, பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் கடைகள் அமைக்க
அனுமதி வழங்குவதற்கு பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள்
எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மானாமதுரை பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் ஜோசப்ராஜன் தலைமையில்
வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் காளீஸ்வரி தெய்வேந்திரன், செயல்
அலுவலர் அமானுல்லா, சுகாதார ஆய்வாளர் அபுபக்கர் மற்றும் வார்டு
கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை சுகாதார மேற்பார்வையாளர் பாலு வாசித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
கவுன்சிலர் முனியசாமி: பேரூராட்சி பகுதியில் இறைச்சிக்காக அறுக்கப்படும்
ஆடுகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீல் வைக்க வேண்டும்.
தேவர்சிலை பகுதியில் புதிதாக மின்கம்பங்கள் நடப்படும்போது
பேரூராட்சிக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் இருக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நகரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக
உள்ளது. இனி வரும் காலங்களில் இப் பிரச்னை மேலும் தீவிரமாகும். எனவே
குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகையாற்றுக்குள் ஆனந்தவல்லி அம்மன் கோயில் முதல் சோணையாசுவாமி கோயில் வரை
மின்விளக்கு வசதி செய்யப்பட வேண்டும்.
கவுன்சிலர் சந்திரசேகரன்: நகரில் பல இடங்களில் மின்விளக்குகள் எரியாத
நிலை உள்ளது. இவற்றை சரி செய்து நகரில் நிலவும் குடிநீர் பிரச்சனையை
தீர்க்க வேண்டும்.
தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்து பேசினர்.
கடந்த ஜூலை மாதம் டி.எஸ்.பி வெள்ளத்துரை முன்னிலையில் நகரில்
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது, பேரூராட்சி இடத்தில் இருந்த கடைகளும்
அகற்றப்பட்டன. இந் நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும்
கடை வைக்க அனுமதி கேட்டு வரப்பெற்ற விண்ணப்பம் குறித்து கூட்டத்தில்
தீர்மானம் வாசிக்கப்பட்டது. இத் தீர்மானத்துக்கு அனைத்து கவுன்சிலர்களும்
ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இத் தீர்மானம் குறித்து பேசிய கவுன்சிலர்கள் முனியசாமி, பாரிவள்ளல்,
சரவணன், மோகன்தாஸ் ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும்
கடைகள் வைக்க பேரூராட்சி அனுமதி வழங்கக்கூடாது. அனுமதி வழங்கினால்
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதன் நோக்கம் நிறைவேறாது. மேலும் ஏராளமானோர்
மீண்டும் பேரூராட்சி இடங்களை ஆக்கிரமித்து கடைகளை வைப்பார்கள் என்றனர்.
இதையடுத்து இத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. மேலும் கவுன்சிலர்களின்
கேள்விகளுக்கு தலைவர் மற்றும் செயல் அலுவலர் பதிலளித்துப் பேசுகையில்
நகரில் நிலவும் குடிநீர் பிரச் னைக்கு மழை பெய்து குடிநீர் திட்டத்தில்
நீர் ஆதாரம் கிடைத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றனர். அதன்பின்
கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.