தினமலர் 12.03.2010
ஆக்கிரமிப்பு அகற்றிய புள்ளி விபரம் சேகரிப்பு
பெருந்துறை: பெருந்துறை நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றியது குறித்த புள்ளி விபரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். பெருந்துறையில் நாளுக்கு நாள் வர்த்தக நிறுவனங்கள் பெருகி வருகிறது. நிறுவனங்கள் தங்கள் விளம்பர பலகைகளை ரோட்டை ஆக்கிரமித்து வைத்துள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மற்றும் மக்கள் செல்ல போதுமான இட வசதியின்றி, விபத்துகள் ஏற்படுகின்றன. பெருந்துறை டி.எஸ்.பி., ஜெயராமன், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்துக்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், வணிகர் சங்கங்களுடன் ஆலோசித்தனர். இதன் பயனாக கடை வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.
ஒருங்கிணைந்த ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கைக்கு பல முறை தேதி குறிக்கப்பட்டது. ஆனால் ஒரு அதிகாரி இருந்தால், மற்றவர் இருப்பதில்லை. அதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. கடந்த 4ம் தேதி ஆக்கிரமிப்பு அகற்ற முடிவானது. இது சம்பந்தமாக பஞ்சாயத்து சார்பில் தண்டோரா போடப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன் டி.எஸ்.பி., ஜெயராமன் போலீஸாருடன் கடை, கடையாக சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறினார். ஒரு சிலர் ஆக்கிரமிப்புகளை எடுத்துக் கொண்டனர். பலர் எடுக்கவில்லை. இதையடுத்து 4ம் தேதி ஒருங்கிணைந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. ஆனால், முன்னறிவிப்பு இன்றி ஆக்கிரமிப்புகள் அகற்றியதாக கூறி கடைக்காரர்கள் கடந்த 6ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தினர். தற்போது பஞ்சாயத்துகள் சார்பில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட கடைகள் பற்றிய புள்ளி விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.