தினமலர் 05.02.2010
ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு திட்டச்சாலை மீட்பு; மாநகராட்சி அதிரடி
கோவை : கோவை நகரில் இணைப்புச் சாலை மற்றும் திட்டச் சாலையை ஆக்கிரமித்திருந்த தனியார் கட்டடங்கள் நேற்று இடித்து அகற்றப்பட்டன. கோவை நகரிலுள்ள சுங்கம், கருணாநிதி நகர் அருகே முனுசாமி கார்டன் பகுதியில், தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதையொட்டி, 30 அடி திட்ட சாலை அமைந்துள்ளது. திட்ட சாலைக்காக தனியார் கட்டுமான நிறுவனம் 200 அடி நீளம் கொண்ட பகுதியை ஏற்கனவே மாநகராட்சிக்கு தான கிரயம் செய்து கொடுத்துள்ளது. ஆனால், அதன்படி செயல்படாமல், தான கிரயம் செய்து கொடுத்த பகுதியையும் ஆக்கிரமித்து கட்டடம், தண்ணீர் தொட்டியை கட்டியிருந்தது.
இதை அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது. நீண்ட நாட்களாகியும் ஆக்கிரமிப்பு எடுக்கப்படாததால், மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேற்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட பகுதியை புல்டோசர் கொண்டு இடித்து அகற்றினர். இதே பகுதியில், மற்றொரு தனியார் நிறுவனமும் 200 வீடுகளை கட்டியுள்ளது. இந்நிறுவனம், அப்பகுதியிலுள்ள இணைப்புச் சாலையை ஆக்கிரமித்து 300 சதுர அடியில் “ஷெட்‘ அமைத்திருந்து. இதற்கும் மாநகராட்சி சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது; எனினும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இந்த ஆக்கிரமிப்பும் நேற்று இடித்து அகற்றப்பட்டது. இதன் மூலம், திட்டசாலைக்கு கிழக்கு நோக்கி 80 அடி ரோடு இணைப்பும், இணைப்புச் சாலைக்கு தெற்கு நோக்கி 100 அடி இணைப்பும் கிடைத்துள்ளது. ஆக்கிரமிப்பு பகுதிகள் மீட்கப்பட் டுள்ளதால், அப்பகுதி மக்கள் இரண்டு சாலைகளையும் பயன்படுத்த ஏதுவாக மாநகராட்சி நிர்வாகம் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.