ஆக்கிரமிப்பை அகற்றி புதிய நூலகக் கட்டடம் கட்டக் கோரிக்கை
கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள கிளை நூலக ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய நூலகக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் பேரூராட்சித் தலைவர் வே.முத்துகுமரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு துணைத் தலைவர் கோமளா கேசவன், செயல் அலுவலர் மணிவேல் முன்னிலை வகித்தனர். பதிவறை எழுத்தர் ராஜேந்திரன் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பேசியது: கும்மிடிப்பூண்டி பஜாரில் நெடுஞ்சாலை துறையினர் சாலை நடுவே தடுப்பு அமைத்து புதிதாக சாலை பணி அமைக்க உள்ளதைத் தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு பணிகளை தொடங்கினால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும் என கேட்டுக்கொண்டதோடு பிரபு நகரில் உள்ள பூங்கா சமூகவிரோதிகளின் கூடாரமாக உள்ள நிலையில் அதை முறையாக பராமரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தீனதயாளன்: உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள கிளை நூலக ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் பாழடைந்த நிலையில் உள்ள கிளை நூலகத்தை அகற்றி புதிய கட்டடம் கட்ட வழிசெய்யவில்லை என்றால் கிளை நூலகம் மூடப்படும் நிலை ஏற்படும். ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோகரன்: கும்மிடிப்பூண்டி பஜாரில் ஆட்டோக்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும், பஸ் நிலையத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
சிராஜூதின்: பழைய தபால் தெருவில் 100 கிலோவாட் மின்மாற்றிக்கு பதிலாக 250 கிலோவாட் மின்மாற்றியை ஏற்பாடு செய்து சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரினார்.
மேலும் கூட்டத்தில் கவுன்சிலர்கள் அறிவழகன், வெங்கடேசன், வ.நா.வடிவேலு, லட்சுமி ராஜா, வெண்ணிலா சண்முகவேல் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.