தினமலர் 01.02.2010
ஆச்சரியம்; ‘பளிச்‘சிடுகிறது ஒன்பதாவது வார்டு!
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி ஒன்பதாவது வார்ட்டில் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணி நடக்கிறது. இதற்காக, தனது சொந்த செலவில் டிராக்டர் டிரெய்லர் வாங்கி, குப்பையை சேகரிக்கும் பணியை செய்து வருகின்றனர், கவுன்சிலர் சுசீலா மற்றும் அவரது கணவரும், “மாஜி‘ கவுன்சிலருமான முத்து.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு (அ.தி.மு.க.,) கவுன்சிலர் சுசீலா; கணவர் முத்து; இரண்டு முறை அந்த வார்டு கவுன்சிலராக இருந்தவர். இம்முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், தனது மனைவியை களத்தில் இறக்கி, ஜெயிக்க வைத்துள்ளார். வீதியில் குப்பையை சேகரிக்க, இரண்டு லட்சம் ரூபாய் செலவில் டிராக்டர் டிரெய்லர் வாங்கியுள்ளார்; ஒரு நாள் விட்டு ஒருநாள் வீடுதோறும் சென்று குப்பையை சேகரித்தும் வருகின்றனர். எம்.ஜி.ஆர்., பிறந்த தினத்தில் இருந்து, இப்பணியை துவக்கியுள்ளனர்.டிராக்டர் டிரெய்லரை ஜீப்பில் இணைத்துள்ளனர்; இவ்வாகனம், வார்டில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் செல்கிறது. வார்டு மக்கள், தங்களது வீடுகளில் சேகரமாகியுள்ள குப்பையை, வாகனம் வரும்போது கொட்டுகின்றனர். குப்பை வாகனம் ஓட்டும் டிரைவருக்கு மாதம் 6,000 ரூபாய் சம்பளம் டீசல் செலவுக்கு 4,000 என, 10 ஆயிரம் ரூபாய் செலவிடுகின்றனர்.இதுபற்றி கவுன்சிலர் கணவர் முத்து கூறியதாவது:முத்து கல்வி அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். ஆண்டுதோறும் மாநகராட்சி பள்ளியில் படிக்கும் 100 மாணவர்களுக்கு சீருடை கொடுக்கிறோம்.
இரண்டு மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குகிறோம். அனாதையாக கிடக்கும் பிரேதத்தை, மின்மயானத்தில் எரியூட்ட 1,200 ரூபாய் வழங்குகிறோம்.என்னை இரண்டு முறை கவுன்சிலராக்கினர். இம்முறை, எனது மனைவியை கவுன்சிலராக்கியுள்ளனர். அதற்கு நன்றியாக, குப்பை பிரச்னையை தீர்க்க முடிவு செய்தோம். இரண்டு லட்சம் ரூபாய் செலவில் டிராக்டர் டிரெய்லரை அறக்கட்டளை மூலம் வாங்கினோம்; ஜீப் மூலம் இணைத்து வீடு வீடாக ஓட்டிச்சென்று குப்பையை சேகரித்து, மாநகராட்சி லாரிகளில் கொட்டி வருகிறோம்.குப்பை இல்லாத வார்டாக மாற்ற வேண்டும் என்பதற்காக, இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். வார்டில் மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் மூலம் சுகாதாரப்பணி நடக்கிறது. வாரத்துக்கு ஒருமுறையே குப்பை லாரி வரும். குப்பை தேங்குவதால் ஏற்படும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, சொந்தமாக டிராக்டர் டிரெய்லர் வாங்கப்பட்டுள்ளது. எனது சொந்த செலவில் குப்பையை அகற்றுவதால், மாநகராட்சிக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் வரை மிச்சமாகிறது.இவ்வாறு, முத்து தெரிவித்தார்.இதுதவிர, “சாக்கடை கால்வாய் மற்றும் வீதிகளில் குப்பையை கொட்டக்கூடாது; குப்பை சேகரிக்க வாகனம் வரும் போது, அவர்களிடம் கொடுக்க வேண்டும். வீதிகளை சுத்தமாக வைத்துக்கொள்வது நமது கடமை‘ என, வார்டு முழுவதும் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது. ஒன்பதாவது வார்டு “பளிச்‘சிடுகிறது.