தினமணி 27.04.2010
ஆடுவதைக் கூடத்தை கட்டாயப்படுத்தும் மாநகராட்சி: இறைச்சி விற்பனையாளர்கள் ஆட்சியரிடம் முறையீடு
திருப்பூர், ஏப். 26: மாநகரின் தென்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆடுவதைக் கூடத்துக்கே ஆடுகளை கொண்டுவந்து வெட்டி எடுத்துச் செல்ல வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள இறைச்சி விற்பனையாளர்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஆட்டு இறைச்சி விற்பனையில் பதிவு பெற்று சுமார் 300 கடைகளும், பதிவு பெறாமல் 1000-க்கு மேற்பட்ட கடைகளும் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலும் சாலையோரம் அமைந்துள்ள இக்கடைகளில் சுகாதாரமின்றி ஆடுகள் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்ததை அடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 51 லட்சம் மதிப்பில், பல்லடம் சாலை– தென்னம்பாளையம் சந்தைப்பேட்டையில் நவீன ஆடுவதைக் கூடம் கட்டப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்டது.
இதையடுத்து, மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள இறைச்சி விற்பனையாளர்கள் இந்த ஆடுவதைக் கூடத்துக்கே ஆடுகளைக் கொண்டுவந்து வெட்டி எடுத்துச்செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆடுவதைக் கூடத்தில் ஆடுகளை வெட் டுவதற்கு ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படுவதாலும், மாநகராட்சியின் ஒரு பகுதியில் இருந்து ஆடுகளை கொண்டு சென்று வெட்டி எடுத்து வர ஏற்படும் கூடுதல் செலவினத்தாலும், இந்த ஆடுவதைக் கூடத்துக்கு ஆடுகள் கொண்டு வருவதை இறைச்சி விற்பனையாளர்கள் புறக்கணித்தனர்.
இதையடுத்து, ஆடுவதைக் கூடத்தில் வெட்டப்படாத ஆட்டு இறைச்சிகளை விற்பனை செய்வோர் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதனால், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளிலுள்ள ஆட்டுஇறைச்சி விற்பனையாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
இதுகுறித்து திருப்பூர் ஆட்டு இறைச்சி விற்பனையாளர் சங்கத் தலைவர் அய்யாசாமி கூறியதாவது:
ஆட்டு இறைச்சி விற்பனையாளர்கள் ஏற்கனவே தங்கள் இடத்திலேயே சுகாதார முறையிலேயே ஆடுகளை வெட்டி விற்பனை செய்து வருகிறோம். இந்நிலையில், தென்னம்பாளையம் ஆடுவதைக் கூடத்திலேயே ஆடுகளை வெட்ட வேண்டும் என்பது மாநகரின் பிறபகுதிகளில் உள்ள விற்பனையாளர்களுக்கு கூடுதல் செலவினத்துடன் சிரமத்தையும் உண்டாக்குகிறது.
மேலும், திருப்பூரில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்வோர் அதற்கான ஆடுகளை வாங்க கன்னிவாடி, குண்டடம், முத்தூர், பரமத்தி, பல்லடம், குன்னத்தூர் உள்ளிட்ட சந்தைகளுக்கு செல்ல வேண்டியுள்ளதால் ஆடுவதைக் கூடத்துக்கு ஆடுகளை கொண்டு வர கட்டாயப்படுத்துவது பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
தவிர, இதுவரை வெட்டுக்கூலி ரூ. 5 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் குத்தகைதாரர்கள் தற்போது ஆடு ஒன்றுக்கு ரூ. 50 தர வேண்டும் என்று கட்டாயம் செய்வது தொழிலை நடத்த முடியாத நிலையை உண்டாக்குகிறது, என்றார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான ஆட்டு இறைச்சி விற்பனையாளர்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தியை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: மாநகரின் தென்பகுதியிலுள்ள ஆடுவதைக் கூடத்துக்கு கொண்டுசென்று ஆடு வெட்ட கட்டாயப்படுத்துவதால் இறைச்சி விற்பனையாளர்களுக்கு எல்லா நிலைகளிலும் ஏற்படும் நெருக்கடிகளைக் கருதி, மாநகரின் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு பகுதிகளிலும் திசைக்கு 2 ஆடுவதைக் கூடங்கள் அமைக்க வேண்டும்.
மேலும், தற்போது இறைச்சி விற்பனை செய்ய ஆடு ஒன்றுக்கு ரூ. 50 வசூலிக்கப் படுவதை குறைத்து, கோவை, ஈரோடு மாநகராட்சிகளில் வசூலிப்பது போல் ரூ. 5 முதல் ரூ. 10 வரை மட்டுமே வசூலிக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளனர்.
கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர், இப்பிரச்னை குறித்து மாநகராட்சி ஆணையருடன் விவாதித்து உரிய நடவடிக்கைஎடுப்பதாக உறுதியளித்தார்.