தினமலர் 30.01.2014
ஆதார் அடையாள அட்டைக்கு ஃபோட்டோ எடுக்க அழைப்பு
குமாரபாளையம்: “தேசிய அடையாள அட்டைக்கு ஃபோட்டோ எடுக்கும் பணி, இன்று (ஜன., 30) முதல் துவங்குகிறது’ என, குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் சங்கரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
குமாரபாளையம் நகராட்சி பகுதியில், இன்று (ஜன., 30) தேசிய அடையாள அட்டைக்கு ஃபோட்டோ எடுக்கும் பணி துவங்குகிறது. இப்பணி முதல் கட்டமாக, ஒன்றாவது வார்டுக்கு, சின்னநாயக்கன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், 18வது வார்டுக்கு, ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியிலும் நடக்கிறது. காலை, 10 மணி முதல், மாலை, 5 மணி வரையும் அனைத்து நாட்களிலும், (விடுமுறை நாட்கள் உள்பட) ஃபோட்டோ எடுக்கப்படும்.
ஃபோட்டோ எடுக்கவரும், ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள், 2010ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டு, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வங்கி கணக்கு பாஸ் புத்தகம் போன்ற ஆவணங்களை எடுத்து வரவேண்டும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இப்பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மற்ற வார்டுகளுக்கு, ஃபோட்டோ எடுக்கும் தேதி அவ்வப்போது தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.